தேர்தல் பிரசாரத்தில், திமுகவினரின், உள்ளடி வேலைகளை முறியடிக்க, மதிமுக - விசிக தரப்பில் ஆலோசிக்கப்படுகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக - விசிக - முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெறுவது, உறுதியாகி உள்ளது. 

அதில், மதிமுக, - விசிக, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், கடந்த  2016 சட்டசபை தேர்தலில், மநகூ என்ற பெயரில் இணைந்து, தேர்தலை சந்தித்தன. அந்த கூட்டணியின், முதல்வர் வேட்பாளராக, விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அக்கூட்டணி கட்சியினர் பிரித்த ஓட்டுகளால், திமுக ஆட்சிக்கு வருவது தடுக்கப்பட்டது. இதனால், மநகூ கட்சி தலைவர்கள் மீது, திமுகவினர் அதிருப்தி அடைந்தனர். 

காவிரி விவகாரம், 'நீட்' தேர்வு போன்றவற்றில், மக்கள் நல கூட்டணியில் இருந்த, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுகவுடன் இணைந்து போராடின. கருணாநிதி மறைவுக்கு பின், அந்த அணியில், வைகோவும் இணைந்தார்.

இதுகுறித்து, மதிமுக - விசிக வட்டாரங்கள் கூறியதாவது: கூட்டணிக்கு, திமுக தலைமை தாங்குகிறது. இதனால், தேர்தல் பிரசாரத்தின்போது, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் கூட, திமுக மாவட்ட செயலர்கள், நிர்வாகிகள் தான், ஓட்டு சேகரிப்பு போன்ற தேர்தல் பணிகளுக்கு பொறுப்பு ஏற்பர். இதற்காக ஏற்படும் செலவுகளை, அவர்கள், வேட்பாளரிடம் வாங்குவர்.

மத்தியில், பிஜேபி ஆட்சியையும், இங்கு, அதிமுக, ஆட்சியையும் வீழ்த்தவே, லோக்சபா தேர்தலில், ஸ்டாலின், மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டார். அதனால் தான், மக்கள் நல கூட்டணியில் இருந்த, கம்யூனிட்ஸ் கட்சிகள், மதிமுக, விசிக, கூட்டணியில் சேர்த்துள்ளார். 

ஆனால், மக்கள் நல கூட்டணியால் தான், கருணாநிதி, 6வது முறையாக, முதல்வராக முடியவில்லை என்ற கோபம், திமுக தொண்டர்களிடம் உள்ளது. இதனால், அவர்கள், தேர்தல் சமயத்தில், கள பணியை ஒழுங்காக செய்யாமல், உள்ளடி வேலையில் ஈடுபடுவரோ என்ற அச்சம், மதிமுக - விசிக கட்சிகளிடம் உள்ளது.

அதேபோல கேட்ட இடங்களை ஒதுக்க, திமுக இழுபறி செய்வது, கூட்டணி கட்சி தொண்டர்களிடம், ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பிரசாரத்தின்போது, ஓட்டு சேகரிப்பு, தேர்தல் செலவு உள்ளிட்ட பொறுப்புகளை, திமுகவினரிடம் ஒப்படைக்காமல், தங்கள் கட்சியினர் வசம் பெறுவதற்கு, மதிமுக - விசிகவினர் கட்சிகள் ஆலோசித்து வருகிறதாம்.