தடை செய்யப்பட்ட பான், குட்கா பொருட்கள் சென்னையில் எங்கெங்கு விற்கப்படுகிறது என்பதை புகைப்பட ஆதாரத்துடன், நிரூபிக்கவே சட்டமன்றத்தில் கொண்டு வந்ததாக திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

பான் மசாலா, குட்கா விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் தடை செய்யப்பட்ட பான், குட்கா பொருட்கள் எங்கெங்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து திமுக ஆய்வு செய்தது. 

அதன் அடிப்படையில், கடந்த 2, 3 நாட்களாக சென்னையின் பல இடங்களில் திமுக ஆய்வு செய்தது. ஆய்வின் அடிப்படையில் வேப்பேரி, பூந்தமல்லி ஹைரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பான், குட்கா விற்கப்பட்டு வருவதை கண்டுபிடித்தது.

இது தொடர்பான புகைப்படங்களும் எங்களிடம் உள்ளன. பான், குட்கா பொருட்களை விற்கக் கூடிய காட்சிகளும், அதனை விற்பவர்களின் புகைப்படமும் உள்ளன. மேலும் பான், குட்கா விற்பனையில் பெண்களும் குழந்தைகளும் ஈடுபடும் புகைப்படமும் உள்ளன.

இது தொடர்பாக பேசும்போது, சபாநாயகர் தனபால், எந்தவித ஆதாரமும் இல்லாமல், இவை கொண்டு வந்து பேசுவது தவறு என்று கூறினார். 

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் அவைக்கு எப்படி கொண்டு வரலாம் என்றார். அதற்கு பான் குட்கா விற்பனைக்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அமைச்சர் உடந்தையாக இருக்கும்போது, அந்த அடிப்படையில்தான் இது கிடைத்ததாக கூறினோம். இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால், வெளிநடப்பு செய்தோம்.

காவல்துறை அதிகாரிகளே விற்பனைக்கு உடந்தையாக உள்ளபோது குட்கா விற்பனையை போலீசில் எப்படி புகார் செய்ய முடியும். சபாநாயகர் கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்சனையை சந்திக்க தயார். அரசு ஆதரவுடன் குட்கா விற்பனை நடப்பதை விளக்கவே அவைக்கு குட்காவை கொண்டு வந்தோம். எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வை வரவேற்கவில்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

பின்னர் துரைமுருகன் பேசும்போது, தடை செய்யப்படட் பொருட்கள் எப்படி கிடைத்தது என்பது பற்றி எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்க வேண்டியதில்லை என்று கூறினார்.