நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு பதிலளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழக அரசு போராடி வருவதாக விஜயபாஸ்கர் கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர் வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளித்த நிலையில், நீட் தேர்வு விவகாரத்தை எழுப்பியிருக்கலாம். ஆனால் அதை அவர்கள் தவறவிட்டுவிட்டார்கள்.

அடுத்து துணை குடியரசு தலைவர் தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலைப் பயன்படுத்தியாவது, தமிழகத்தின் ஏழை - எளிய மாணவர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்று கூறினேன். ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர், நடந்த சம்பவங்களையே பேசி வருகிறார். அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் வெளிநடப்பு செய்துள்ளோம்.

நீட் தேர்வு விவகாரத்தை சரியான நேரத்தில் குடியரசு தலைவரிடம் கொண்டு சென்றிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கும் என்றும், இந்த பிரச்சனையை ஏற்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று துரைமுருகன் கூறினார்.