சென்னையில் நடைபெற்ற திமுக மக்களவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக புதிய எம்பிக்கள் கூட்டம் சென்னையில் மாலையில் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு கூடிய இந்த கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 23 மக்களவை உறுப்பினர்களும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஈரோடு - கணேசமூர்த்தி, பெரம்பலூர் - பச்சமுத்து, விழுப்புரம் - ரவிக்குமார், நாமக்கல் - சின்ராஜ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் மக்களவை திமுக குழு தலைவர் பதவி யாருக்கு? என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்த பதவியை பிடிக்க மூத்த தலைவர் டி.ஆர்.பாலு  - கனிமொழி இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.