நரி வடக்க போனா என்ன, கிழக்க போனா என்ன? நம்ம மேலே பாய்ஞ்சு பிறாண்டாம இருந்தால் சரி!; என்றுதான் தினகரன் கைது விவகாரத்தில் தமிழகத்தின் மற்ற பிற எதிர்கட்சிகள்  கண்டும் காணாமல் அலட்சியம் காட்டிக் கொண்டிருந்தன.

ஆனால் தி.மு.க.வின் செயல்தலைவரான ஸ்டாலினோ ‘அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து பயங்காட்டி தமிழக அரசை ஆட்டுவிக்க முயல்கிறது மத்திய அரசு’ என்று சமீபத்தில் போட்டுத்தாக்கினார். தினகரனுக்கு சப்போர்ட்டிங் ஸ்டெட்மெண்டாக இதை எடுத்துக் கொள்ள அவசியமில்லை என்றாலும் கூட பா.ஜ.க.வுக்கு எதிரான தி.மு.க.வின் தைரிய அரசியல் இது எனலாம்.

இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கை சி.பி.ஐ. மீண்டும் தூசி தட்ட ஆரம்பித்திருப்பது தி.மு.க. தனக்கு தானே தேடிச்சென்று ஆப்பில் உட்கார்ந்து கொண்ட கதை போல் இருக்கிறது என்கிறார்கள் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.

அடர்த்தி அதிகமான வார்த்தைகளை போட்டு பா.ஜ.க.வை ஸ்டாலின் விமர்சித்ததன் விளைவாக கூட இதை எடுத்துக் கொள்ளளலாம் என்கிறார்கள் அவர்கள். கருணாநிதியின் காஸ்ட்லி மற்றும் அதிகார மிகு பேரன்களான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனின் ஆகியோர் மேல் விழும் வழக்கு அழுத்தம் நிச்சயம் தி.மு.க.வையும் பாதிக்கும்தானே!

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கிலிருந்து சில மாதங்களுக்கு முன் மாறன் பிரதர்ஸ் இருவரும் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இப்போது அதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளது உண்மையிலேயே தி.மு.க.வுக்கு ஒரு பேரதிர்ச்சிதான்.

2ஜி வழக்கில் கூடிய விரைவில் தீர்ப்பு வர இருக்கும் நிலையில் இந்த வழக்கு மீண்டும் எமெர்ஜ் ஆகிறது. அடிக்கிற அக்னி அரசியல் வெயிலில் ஆக இந்த டபுள் தமாக்காவை தி.மு.க. எப்படித்தான் தாங்கப்போகிறதோ!

தி.மு.க.வின் கண்ணை கலங்க வைக்கும் வண்ணம் ஏர்செல் வழக்கை சிபிஐ தூசி தட்ட ஆரம்பித்திருக்கும் விஷயத்துக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று இன்னும் கொஞ்ச நேரத்தில் பா.ஜ.க.வின் ஏதோ ஒரு நிர்வாகி சொல்லப்போகும் ஸ்டேட்மெண்டை நாமும் அப்படியே நம்புவோமாக!