தி.மு.க ஒரு காலாவதியான கட்சியாகி விட்டது. அதனால் தான் தொண்டர்களை உற்சாகப்படுத்த ஸ்டாலின் டி.வி.யில் பேசுகிறார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

அதிமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக வருவாய்துறை அமைச்சர் உதயக்குமார்... "எட்டு மாதங்களில் ஆட்சியை பிடித்து விடலாம் என தி.மு.க கனவில் உள்ளது. தி.மு.க ஆட்சியில் நடந்தவற்றை மக்கள்  மறக்கவில்லை. நிலஅபகரிப்பு, மின்வெட்டை ஏற்படுத்தி தமிழகத்தை இருட்டில் தள்ளியது,
மேலும் கட்சி மற்றும் ஆட்சியில் குடும்ப ஆதிக்கம் செலுத்தியதை யாரும் மறக்கவில்லை. மக்களின் மனநிலையை புரியாமல் ஏஜென்சியை நியமனம் செய்து கட்சியை நடத்தி வருகிறார் ஸ்டாலின். தி.மு.க.வுக்கும் மக்களுக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. தி.மு.க. காலாவதியாகி விட்டதால் இந்த ஆட்சி முடிந்து விடும் என தொண்டர்களை உற்சாகப்படுத்த டி.வி முன் இருந்து பேசி வருகிறார் ஸ்டாலின். அவர் கடைசி வரை பேசதான் முடியும்.

கொரோனா என்ற பெரும் உயிர் அச்சுறுத்தலை தாண்டி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பாதித்த மக்களுக்கு அரிசி, கோதுமை, காய்கறி, மருத்துவ உதவிகள் அனைத்தையும் கழக தொண்டர்கள் செய்து வந்தார்கள். டி.வி முன் இருந்து ஸ்டாலின் பேசியதை தவிர அவர் எந்த மக்கள் பணி செய்தார் கொரோனா என்ற நோய்க்கு மருந்துகள் இல்லாத நேரத்திலும் நாம் 86 சதவீதம் மக்களை குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளோம்.