திமுக நிர்வாகிகள் சிலர் அதிமுக அமைச்சர்களுடன் உறவு வைத்திருப்பது பற்றி நடந்து முடிந்த திமுக எம்.எல்.ஏ., எம்.பி. கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள்  வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா இருந்தவரை பொது நிகழ்ச்சிகளில் திமுகவினரைக் கண்டால்கூட முகம் திருப்பிக்கொள்வார்கள் அதிமுகவினர். ஆனால், அவர் மறைந்த பிறகு காட்சிகள் மாறிவிட்டன. அதிமுக திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பொதுவெளியில் கையைக் கோர்த்துக்கொண்டு அளவளாவது அதிகரித்துவிட்டது. அரசியல் நாகரீகம் என்ற அளவில் மட்டுமே பார்க்கப்பட்டு வந்த இந்த விஷயம் இன்று திமுக கூட்டத்தில் பேசும் அளவுக்கு சர்ச்சையாகி இருக்கிறது. 
இந்த விவகாரத்தை திமுக எம்.எல்.ஏ. ஒருவர் வெளிப்படையாகவே பேசியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “திமுக நிர்வாகிகள் சிலர் அதிமுக அமைச்சர்களுடம் கைகோர்த்து செயல்படுகிறார்கள். அவர்கள் அதிமுக சார்பாகப் பணியாற்றவும் செய்கிறார்கள். இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைய அவர்கள்தான் காரணம். இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லையென்றால், உள்ளாட்சித்தேர்தல் உள்பட எதிர்காலத் தேர்தல்கள் திமுகவுக்கு  கடினமாகிவிடும்” என்று எச்சரித்து பேசியிருக்கிறார். இதேபோல கூட்டத்தில் பங்கேற்ற இன்னொரு எம்.எல்.ஏ.வும் இதே கருத்தை வலியுறித்தியதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, “நம்முடைய மாவட்ட செயலாளர்கள் ஊழல் அமைச்சர்களுடன் எப்படி உறவாடலாம்?” என்று கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

  
இந்த விவகாரத்தை கூட்டத்தில் பேசும்போது கவனமாகக் கேட்டுக்கொண்ட மு.க. ஸ்டாலின், உரை நிகழ்த்தும்போது அதைக் கோடிட்டு பேசியிருக்கிறார். இந்த விஷயத்தைப் பற்றி ஸ்டாலின் பேசும்போது சற்று கோபத்துடனும் இருந்ததாகக் கூறப்படுகிறது. “இதற்கு முன்புவரை திமுகவினர் அமைச்சர்களுடன் கைகோர்த்து செயல்பட்டதைப் பற்றி கவலைப்படவில்லை. இதன்பிறகும் திமுக நிர்வாகிகள் யாராவது அதிமுகவினருடன் கைகோர்த்து செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஸ்டாலின் பேசியதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “திமுக நிர்வாகிகள் அதிமுக அமைச்சர்களுடன் கைகோர்த்து செயல்படுவதைப் பற்றிய விவகாரத்தை எம்.எல்.ஏ.க்கள் எழுப்பியபோது ஸ்டாலின் கடும் கோபம் அடைந்தார்.” என்று தெரிவித்தன.


அதிமுக அமைச்சர்களுடன் திமுகவினர் இணைந்து செயல்படுவது பற்றி கூட்டத்தில் பேசப்பட்டிருப்பது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகி உள்ளன. அமைச்சர் ஜெயக்குமார்கூட செய்தியாளர்களிடம் பேசும்போதெல்லாம், “அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று திமுகவினரே விரும்புகிறார்கள்”. “திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில் திமுகவினர் நன்றாக இருக்கிறார்கள்” என்றெல்லாம் பேசியிருக்கிறார். அவர் அரசியல் ரீதியாகப் பேசுவதாக கூறப்பட்டது. ஆனால், நெருப்பு இல்லாமல் புகையுமா என்ற பழமொழி மீண்டும் நிரூபனமாகியிருக்கிறது!