திமுகவிலிருந்து அதிகமானோர் விலகி பாஜகவில் இணைந்து வருகிறார்கள். இது தமிழக அரசியலில் திமுக எதிர்பார்க்காத ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.அதே வேளையில் திமுகவின் கோட்டை கலகலத்துப் போய்விட்டது என தெரிவித்துள்ளார் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன், 

திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன்..."பாஜகவை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அச்சம் வந்து விட்டது. அதனால் தான் திமுகவை யாரும் பலவீனப்படுத்த முடியாது எனப் பேசியுள்ளார். அவர் அப்படி பேசியதே எங்களுக்கு வெற்றி தான். சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் களம் கண்டு வெற்றி காண்பார். திருவாரூர் மாவட்டம் திமுக மாவட்டம் என்கிற காலம் மாறிவிட்டது” எனக் கூறினார்.


எல்.முருகன் போன்றோர் பாஜகவில் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வளராது என திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எல்.முருகன் பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு தான் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் திமுக மூத்த தலைவர் விபி துரைசாமி ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்களைப் பற்றி குறை கூறுவதை விட்டுவிட்டு திமுக தனது வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். திமுகவின் கோட்டை கலகலத்துப் போய்விட்டது” என தெரிவித்தார்.