திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மன வேதனையில் இருந்த திமுக தொண்டர்களுக்கு, அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என முதல்வர் பழனிசாமி கூறிய வார்த்தை, திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. 

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் தொடர் சிகிச்சையின் விளைவாக அவரது உடல்நிலை சீராகிவருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. உடல்நிலையில் பின்னடைவு என்றதும் மனமுடைந்த தொண்டர்கள், சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை சீரடைந்தது என்றதும் சற்று ஆறுதல் அடைந்தனர். விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள், அதிகாலையில் சற்று கலைந்து சென்றனர். மீண்டும் காலை முதல் ஏராளமானோர் திரண்டுள்ளனர். 

கருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கை எப்போது வரும்? அவரது உடல்நிலை எந்த நிலையில் உள்ளது? என்பதை அறிந்துகொள்ளும் முனைப்பில் ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்புடன் மருத்துவமனை வாயிலில் தொண்டர்கள் காத்துக் கிடக்கின்றனர். 

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சிவி.சண்முகம், காமராஜ் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியை பார்த்துவிட்டு ஸ்டாலினிடம் கருணாநிதியின் நலம் விசாரித்தனர். 

கருணாநிதியை பார்த்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, நானும் துணை முதல்வரும் ஸ்டாலின் மற்றும் கனிமொழியுடன் சேர்ந்து கருணாநிதியை நேரில் பார்த்தோம்.  கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. நலமுடன் இருக்கிறார். மருத்துவக்குழு தொடர்ந்து கவனித்துவருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 

கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலையில் இருந்த திமுக தொண்டர்கள், முதல்வர் பழனிசாமி கூறிய வார்த்தைகளை கேட்டு நம்பிக்கையுடன் உற்சாகமடைந்துள்ளனர்.