’’அரசியலுக்கு சிவாஜி வந்தபோது, விஜயகாந்த் வந்தபோது, கமல்ஹாசன் வந்தபோது அசராத திமுக , எம்.ஜி.ஆரையே  ஈசியா நீக்கிய திமுக, ரஜினி அரசியலில் இறங்குவதற்கு முன்னர் டையபரே அந்து விழுகிற அளவுக்கு பயத்தில் கதற காரணம், ரஜினி 1996 ல்  காட்டிய காட்டு அவர்களுக்கு நல்லாவே தெரியும் என ரஜினி மக்கள் மன்றத்தினர் பதிவிட்டு வருகின்றனர்.

திமுகவுக்கும், ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சிக்கும் தான் இனி போட்டியே என்பதை சமூக வலைதளங்கள் மூலம் இரு தரப்பினரும் நிரூபித்து வருகின்றனர்.  ரஜினி பேட்டி கொடுத்தால் அதற்கு கடுமையான விமர்சனங்களை திமுகவினர் முன் வைத்து வருகின்றனர். அதேபோல் ஸ்டாலின் கருத்துச் சொன்னால் அதற்கு எதிர்விணையாற்றி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

சமூகவலைதளங்களில் இரு தரப்பினருக்கும் ஏற்படும் கருத்து மோதல் கதிகலங்க வைத்து வருகிறது.  இன்று ரஜினிகாந்த் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்கு திமுகவினர் விமர்சனம் செய்தனர். இதனால், கொதித்தெழுந்த ரஜினி ரசிகர்கள் #ரஜினி_பயத்தில்திமுக என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கினர். 

திமுக ரஜினிக்கு பயப்படுவதற்கு காரணமாக 23 ஆண்டுகளுக்கு முந்தைய ஃப்ளாஷ்பேக்கை எடுத்து விடுகின்றனர்.  1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக- தமாகா கூட்டணி வெற்றி பெற்றதற்கு எங்கள் தலைவர் ரஜினி காந்த் குரல் கொடுத்ததே காரணம்.  

பாட்ஷா படம் 1995ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அப்போது தான் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் முட்டல் மோதல் உருவானது. அப்போது ரஜினியிடம் நெருக்கமாக இருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட சில நண்பர்கள்தான் மூப்பனாரிடம் கூட்டிப் போனார்கள். மூப்பனாரும், ப.சிதம்பரமும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் ரஜினியை அழைத்து போனதாகவும் சொல்லப்பட்டது. 

அடுத்து தேர்தல் வந்த போது காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், இதனை விரும்பாத மூப்பனார் காங்கிரஸ் கட்சியை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினார். திமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது தமாகா. மூப்பனார் மீதுள்ள மரியாதையால் அந்தத் தேர்தலில் வாய்ஸ் கொடுத்தார் ரஜினி. அந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றது தமாகா. திமுக ஆட்சியமைத்தது.  திமுக 173 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமாகா 39 தொகுதிகளில் வெற்றிபெற்றது.  அதிமுக வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மண்ணைக் கவ்வியது. 

அப்போது தலைவர் ரஜினிகாந்த்தின் எதிர் குரலையும் அவரது புகைப்படங்களையும் அவர், சைக்கிள் ஓட்டும் போஸ்டர்களையும் வைத்து தான் தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றீர்கள். அதனை தி.மு.க.,வினர் மறந்து விட்டு இப்போது தாங்கள் மட்டுமே பெரிய ஆள் என்கிற மமதையில் அவர்கள் நடந்து கொள்கிறார், பழையதை மறந்து விட்டு பேசக்கூடாது என ரஜினி ரசிகர்கள் திமுகவினரை எச்சரித்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.