இது சாமான்யனுக்கும் தெரிந்த சாதாரன ராஜதந்திரம்!...

நாம் ஒருவரை மதிக்கவில்லை என்றாலோ, அவரைப் பார்த்து பயப்படவில்லை என்றாலோ அந்த நபரைப் பற்றி பேசவும் மாட்டோம், கண்டு கொள்ளவும் மாட்டோம்.
ஆனால் பல கோடிகளைக் கொட்டி இரண்டு நாட்களாக மாநாடு நடத்திய தி.மு.க. அதில் ரஜினியை கிண்டலடிப்பதும், கேலி பேசுவதும், திட்டித் தீர்ப்பதும், எச்சரிக்கை விடுவதுமாகவே இருந்தது என்றால் அந்த செயல் சொல்லும் ரகசியமென்ன?...’ஆம் ரஜினியை பார்த்து பயப்படுகிறது தி.மு.க!’ என்பதுதானே.

இரண்டு நாட்களிலும் தி.மு.க.வின் முக்கிய பேச்சாளரில் துவங்கி ஸ்டாலின் வரை கிட்டத்தட்ட அத்தனை பேரும் ரஜினியை சுற்றிச் சுற்றியேதான் பேசியிருக்கிறார்கள். ’இங்கே சிஸ்டம் சரியில்லை, வெற்றிடம் இருக்கிறது.’ என்கிற இரண்டு பஞ்ச் டயலாக்குகளையும் இரு வேறு இடங்களில் ஒரேயொரு முறைதான சொன்னார் ரஜினி.

ஆனால் இந்த டயலாக்கை தனது மாநாட்டு மேடையில் மீண்டும் மீண்டும் சொல்லி ரஜினிக்கு பெரும் புகழை ஈட்டித் தந்துள்ளது தி.மு.க. என்று சொன்னால், அதை மறுப்பது எப்படி?

கழக பேச்சாளரான சைதை சாதிக், மாநாட்டின் முதல் நாளன்று  பேச வந்தார். அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு ‘தளபதி அழைக்கிறார்! இளைஞனே எழுந்து வா!’ என்பதுதான். அவரோ ‘என் தமிழ் இளைஞன், வேங்கை மகன் அழைத்தாலும் வரமாட்டான், விருமாண்டி மகன் அழைத்தாலும் வரமாட்டான்.

ஆனால் தலைவர் மு.க.வின் மகனான எங்கள் தளபதி அழைத்தால் எழுந்து வருவான்.’ என்று பற்ற வைத்தார். அதைத்தொடர்ந்து ‘இது பெரியார் மண்’ என்ற தலைப்பில் பேச வந்த சபாபதி மோகனும் அதை வழிமொழிந்தார்.

இந்த தமிழகத்தை காக்கப்போவது தளபதி மட்டுமில்லை, அவரையும் தாண்டி அவரது புதல்வன் உதயநிதியும் வருவார்! என்றார்கள்.

இரண்டாம் நாள் பேச வந்த திண்டுக்கல் லியோனியோ ”லட்சோப லட்சம் தொண்டர்களை வைத்திருந்த அண்ணாவே தேர்தல் அரசியல் முடிவை தன்னிச்சையாக எடுக்கவில்லை. தொண்டர்களிடம் வாக்கு சீட்டு கொடுத்து அவர்களை முடிவெடுக்க சொல்லித்தான் தேர்தலுக்கு வந்தார். ஆனால் வெற்றிடம் இருப்பதாக சொல்லும் நபரோ...கட்சி துவக்கும் முன்னேயே முதல்வராக ஆசைப்படுகிறார்! என்றார்.

இவருக்குப் பின் பேச வந்த பொன்முடியோ, எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுபவராய், வீரபாண்டிய கட்டப்பொம்மன் வசனம் போல் ‘தமிழனா, தன்மானம் உள்ளவனா, மானங்கெட்டவனே’ என்று கொதித்துக் கொட்டினார் ரஜினி மேல்.

சரி, இவர்கள்தான் இப்படி ஆடுகிறார் என்று பாத்தால் ‘தல’யான தளபதியும் ’வெற்றிடம் இருக்கிறது என்றபடி சிலர் அரசியலுக்கு வருகிறார்கள். எந்த வெற்றிடமும் இங்கில்லை. அவர்களாக உருவாக்கும் மாய பிம்பம் அது.’ என்று தன் பங்குக்கும் ரஜினியை போட்டுத் தாக்கினார்.

ஆக மாநாடு முழுக்க ரஜினியை மட்டுமே குறிவைத்து தி.மு.க. போட்டுத் தாக்கியிருக்கிறது. இது, தங்களின் அரசியல் எதிரி ரஜினிகாந்துதான்! என்பதை சொல்லாமல் அக்கட்சி சொல்லியது போல் உள்ளது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை சாடித்தள்ளி அவர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சனம் செய்வதை விடுத்து, இப்படி  கட்சியே துவக்காத ரஜினியை திட்டுவதன் மூலம் அவர் மீதான தி.மு.க.வின் பயம் அப்பட்டமாக வெளிப்பட துவங்கியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கழகத்தில் கணக்குக் கேட்டு புரட்சி செய்த எம்.ஜி.ஆரை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் அவர் அப்படியே சென்றிருப்பார், அவரை திட்டித் திட்டியே வீணாக வளர்த்துவிட்டோம்! என்று கருணாநிதி பலமுறை புலம்பியிருக்கிறார்.

இன்று ஸ்டாலினும் ரஜினி விஷயத்தில் அதையே செய்ய துவங்கியுள்ளார். ரஜினிகாந்தை இவர்கள் திட்டுவது மேலும் மேலும் அவரது வளர்ச்சிக்குதான் கைகொடுக்கும்! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.