சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மிக கடுமையாகத் தாக்கி பேசினார். இதற்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பதிலடிக் கொடுத்திருக்கிறார்கள். விருதுநகரில் கூட்டாக இருவரும் சந்தித்தனர். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில், “திமுக தலைவரை தரங்கெட்ட வகையில் பேசினால் எடப்பாடி பழனிசாமி பாராட்டுவார் என்று நினைத்து ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். ஜெயலலிதா இருந்தபோதே அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவின் காலை மட்டுமல்ல, அவருடைய கார் டயரையும் நக்கிப் பிழைத்தார்கள்.
தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் காலை நக்கிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் சென்று மக்களைச் சந்திப்பார். ஆனால், துணைக்கு ஆள் இல்லாமல் ராஜேந்திர பாலாஜியால் செல்ல முடியுமா? திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலில் சிறைசெல்லும் அமைச்சராக ராஜேந்திர பாலாஜிதான் இருப்பார். இதை திமுக தலைவர் சொன்னதில் என்ன தவறு? தரங்கெட்ட அரசியல் செய்வதை ராஜேந்திரபாலாஜி உடனே நிறுத்தவேண்டும். இல்லையெனில் அவரால் இனி விருதுநகர் மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.


தங்கம் தென்னரசு கூறுகையில், “ராஜேந்திர பாலாஜிக்கு ஆண்மை இருந்தால் திமுக தலைவரின் குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு போட்டிருக்க வேண்டும். ‘அரண்மனை நாயே, அடக்கடா வாயை’ என்பது கருணாநிதியின் வசனம். ராஜேந்திரபாலாஜி நாவை அடக்கவேண்டும் இல்லையெனில் ஜனநாயக முறைப்படி தி.மு.க அவர் நாவை அடக்கும். இந்திரா காந்திக்கே கருப்புக்கொடி காட்டிய இயக்கம் திமுக. ராஜேந்திர பாலாஜியெல்லாம் எம்மாத்திரம். எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களை அடக்கிவைக்க வேண்டும். இல்லையெனில் திமுக திருப்பி அடிக்கும்” எனத் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.