திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

அப்போது, மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் கடந்த 6 நாட்களாக பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று 7-ம் நாளை எட்டியுள்ளது. டெல்லி புறநகர் பகுதியான புராரியில் சந்த் நிரங்கரி சமகம் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில விவசாயிகளும் களத்தில் ஆதரவாக இணைந்துள்ளனர். விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், திமுக இப்போராட்டம் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.