திமுகவுக்கு பொதுமக்களின் வாக்குவங்கி என்பது கிடையவே கிடையாது. திமுகவின் வாக்குகள் மட்டுமே அவர்களுக்கு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறியுள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக இலக்கிய அணி செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான,பா. வளர்மதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 

அதிமுக அரசின் நலத் திட்டங்களை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாராட்டுகின்றன. பொங்கல் பரிசு தொகுப்பு ரூபாய் 2500 வழங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின், ஏதேதோ உளறி வருகிறார். அதை தடுப்பதற்காக நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். ஏனெனில் எப்போதும் திமுகவுக்கு பொதுமக்களின் வாக்குவங்கி என்பது கிடையவே கிடையாது. அவர்களுக்கு இருப்பதெல்லாம் திமுகவின் வாக்குகள் மட்டுந்தான். இப்போது கருணாநிதியின் பெயரை சொல்லி கூட ஸ்டாலினால் ஓட்டு கேட்க முடியவில்லை. அந்த அளவிற்கு பொதுமக்களிடம் நல்ல பெயரை வாங்கி வைத்துள்ளார்கள். 

எங்கு பார்த்தாலும் அதிமுக அரசை மக்கள் பாராட்டுகிறார்கள், போற்றுகிறார்கள் மீண்டும் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இதை உணர்ந்துகொண்ட ஸ்டாலின் அச்சத்தில் மூழ்கி உள்ளார். அரசு செய்துள்ள மக்கள் நல திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறினால் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் திமுக டெபாசிட் இழப்பது உறுதியாகி விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.