திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ். பாரதி, தயாநிதி மாறன் தலித்துகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அண்மையில் தமிழக அரசியல் களம் சூடானது. இந்த விவகாரத்தில் பாஜகதான் மிகத் தீவிரமாக இயங்கியது. திமுக தலித்துகளுக்கு எதிரான கட்சி என்று தொடர்ச்சியாக பாஜக குற்றம்சாட்டியது. சமூக ஊடகங்களில் அவ்வாறே பிரசாரமும் செய்தது. இந்நிலையில் திமுக அதே போன்ற விவகாரத்தை கையில் எடுத்து,  கட்சி பத்திரிகையான ‘முரசொலி’யில் இன்று வெளியான குறுங்கட்டுரையில் பாஜகவை விமர்சித்து எழுதியுள்ளது.


சிபிஎஸ்இ 4-ம் வகுப்பு பாடத்தில் ‘இந்தியாவின் தீண்டத்தகாத சாதி’ பட்டியலினத்தவரைக் குறிப்பிட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக ‘முரசொலி’யில்  ‘பாலகர்தம் பள்ளிப் பாடத்தில் பதிவு பெற்றுள்ள தீண்டாமை’ எனும் தலைப்பில், “தீண்டாமைக்கு எதிராக இயக்கம் நடத்தினார் அண்ணல் காந்தி அடிகள். தீண்டாமையை ஒழித்திடப் பாடுபட்டவர்கள் பெரியாரும் அண்ணாவும். சகல சாதியினரும் -  தீண்டாமையை வெறுத்து ஒதுக்கி - நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து வாழ பெரியார் நினைவு சமத்துவபுரம் கண்டவர் கலைஞர்.


தீண்டாமை ஒழிப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது. வன்கொடுமைச் சட்டம் அமலில் உள்ளது. இந்தளவுக்குப் பிறகும், மத்திய பாஜக அரசின் சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் ‘இந்தியாவின் தீண்டத்தகாத சாதி’ (Untocuhable cast of India) என்று துணிச்சலாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் மண்டைக் கொழுப்பு மண்டிவிட்டது என்பதுதானே பொருள். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படிக்கும் பாலகர்களின் பிஞ்சு உள்ளங்களிலே நஞ்சைப் பாய்ச்சும் நயவஞ்சகச் செயல்தானே இது!
இந்த வன்கொடுமைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டாமா?” என்பதோடு பாஜக தலைவர் முருகன் மற்றும் பாஜகவை ஆதரிக்கும் தமிழர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்களா?என்றும் முரசொலியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.