பாஜக சார்பில் ‘தாமரை எழுச்சி யாத்திரை’ புதுச்சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு பங்கேற்று பேசினார்.  “இங்கே கூடியிருக்கும் மக்களின் எழுச்சியை பார்க்கிறபோது புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகம், புதுச்சேரியில் பாஜக வெற்றி பெற்றுவிடுமோ என்ற பயத்தில் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் உள்ளன. புதுச்சேரியை காங்கிரஸ் - திமுக ஆட்சி சீரழித்துவிட்டது. புதுச்சேரி மக்கள் வேதனையில் உள்ளனர். இதற்கு காரணம் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் அதிகரித்ததுதான்.


ஒரே நாடு ஒரே ரே‌‌ஷன்கார்டு திட்டத்தின் மூலம் சாதி, மத, பாகுபாடு, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் எல்லோரும் அரிசி, கோதுமை போன்ற ரே‌‌ஷன் பொருட்களைப் பெற முடியும். ஆனால், புதுச்சேரியில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பாஜக மேல்சாதிகாரர்களுக்கு சொந்தம் என்று காங்கிரஸ், திமுகவினர் பாஜக மீது தவறான பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், பாஜகவில் சிறுபான்மையினர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாகவும், பல முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர். நான்கூட சிறுபான்மையினர்தான்.
விவசாயிகளை மேம்படுத்த மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இச்சட்டம் தானாக கொண்டு வரப்படவில்லை. ஒன்றரை லட்சம் விவசாயிகளிடம் கலந்து பேசிதான் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ், திமுகவும் எதிர்க்கட்சிகள் என்பதற்காக எதிர்க்கின்றனர். 1970-ல் திமுக ஆட்சியில் 5 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவில் இல்லையா? திட்டங்களை செயல்படுத்தாத முதல்வர் நாராயணசாமி  ஆளுநரை குற்றம் சாட்டிவருகிறார். 
என்னுடைய அரசியல் பயணம் திமுகவில்தான் தொடங்கியது. அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி எதிர்க்கட்சி தலைவர்களை மரியாதையுடன் பேச வேண்டும் என்றார். ஆனால், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எடுபிடி முதல்வர் என்று மரியாதை குறைவாகப் பேசுகிறார். உதயநிதி ஸ்டாலின் கூட்டத்துக்கு அனுமதியில்லை என்று போலீஸிடம், 5 மாதத்தில் எங்கள் ஆட்சிதான். அப்போது உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்று மிரட்டியுள்ளார். தாத்தா எங்கே? பேரன் எங்கே?
காங்கிரஸ், திமுக காலம் முடிந்துவிட்டது. நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமையப்போவது உறுதி. தாமரை மலர்ந்தே தீரும்.” என்று குஷ்பு பேசினார்.