திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி இருந்துவருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில் போட்டியிட வேண்டிய தொகுதிகள் எவை என்பது பற்றி கடந்த மூன்று தினங்களாக திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் தாங்கள் விரும்பும் தொகுதிகளைக் கேட்பதால், அதைப் பெறுவதில் காங்கிரஸ் ஆர்வம் காட்டிவருகிறது. காங்கிரஸ் கேட்கும் பல தொகுதிகளில் திமுகவும் போட்டியிட விரும்புவதால் இழுபறி நீடிக்கிறது. கடைசி கட்ட தகவலின்படி 2 தொகுதிகளை முடிவு செய்வதில் முட்டுக்கட்டை நீடிப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தரப்பில் வழக்கமாக கேட்கப்படும் கன்னியாகுமரி, சிவகங்கை, ஆரணி, விருதுநகர், தேனி போன்ற தொகுதிகளை திமுக வழங்க ஏற்கனவே ஒப்புக் கொண்டுவிட்டது. மேலும் திருச்சி, ஈரோடு, தென் சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டது. இதில் திருச்சி, அரக்கோணம், ஆரணி ஆகிய தொகுதிகளை வழங்க திமுக முன்வந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், திடீரென்று திண்டுக்கல் தொகுதியை காங்கிரஸ் மேலிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு திண்டுக்கலையும் வழங்க திமுக முன்வந்தது. இதன்படி புதுச்சேரி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருவள்ளூர், அரக்கோணம், தேனி, ஆரணி, விருதுநகர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு என முடிவாயின. ஆனால், திருச்சி தொகுதியை திமுகவுக்கு பெற வேண்டும் என்று திமுக திமுக நிர்வாகிகள் அழுத்தம் திருத்தமாக ஸ்டாலினிடம் வலியுறுத்தினார்கள். 
கடந்த தேர்தலில் திமுக சார்பில் திருச்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மு. அன்பழகன் மீண்டும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறார். அவருக்கு மாவட்ட செயலாளர் கே.என். நேருவின் ஆதரவும் உள்ளது. அதேபோல அரக்கோணம் தொகுதியையும் திமுகவே போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த இரு தொகுதிகள் தொடர்பாக டெல்லி தலைமையுடன் பேசி முடிவு செய்ய ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் பற்றி இன்று அறிவிக்க திமுக முடிவு செய்திருந்தது. இரு தொகுதிகள் பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டால், இன்று தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்புகள் உண்டு. நாளை கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பதால், அதற்கு முன்பாக தொகுதிகளின் பட்டியலை அறிவிக்க திமுக மும்மரம் காட்டிவருகிறது.