எந்த வகையில் விசாரித்தாலும் 2 ஜி வழக்கில் இருந்து திமுக விடுதலையாகும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 
 
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட திமுக சார்பில் தி.நகரில் இரத்ததான முகாம் நடைபெற்றது. திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ 8 வழிச்சாலை தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள மத்திய மாநில அரசுகள் குறித்து கூட்டணியில் உள்ள அன்புமணி ராமதாஸ் தற்போது என்ன சொல்ல போகிறார்? 8 வழிச்சாலையை மக்களோடு இணைந்து திமுகவும் எதிர்க்கும். 
 
சிபிஐ தனி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட 2 ஜி வழக்கை தற்போது மத்திய அரசு கையில் எடுத்துக்கொண்டு அவசரமாக விசாரிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் சென்றுள்ளது. எந்த வகையில் விசாரித்தாலும் 2 ஜி வழக்கில் இருந்து திமுக விடுதலையாகும்.மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்துள்ள வாக்குகள் பெரிய வாக்கு சதவிகிதம் இல்லை. அவர் மக்களுக்காக உழைக்கக்கூடிய தலைவர் இல்லை என்பது அவரது செயலில் தெரிகிறது. 
 
திமுக தலைமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் திமுக சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்துவருகிறோம். உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது குறித்து தலைமை அவசரப்படாது. இதுபோன்ற தகவல்கள் ஊடகங்களே பெரிது படுத்துகிறது’’ என அவர் தெரிவித்தார்.