வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்று திருமாவளவன் முடிவு செய்துள்ளார். இரண்டு தொகுதிகள் வேண்டும் என்று கோரி வரும் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி கண்டிப்பாக வேண்டும் என்று தி.மு.கவை நிர்பந்தித்து வருகிறார். கடலூரை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டியுள்ளதால் அந்த மாவட்டத்தில் உள்ள மற்றொரு தொகுதியான சிதம்பரத்தில் தி.மு.க போட்டியிட முடிவு செய்துள்ளது.

கடலூர் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளதால் நிச்சயமாக சிதம்பரம் தொகுதியை தி.மு.க வேட்பாளருக்கு தான் ஒதுக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் வலியுறுத்தி வருகிறார். இதனால் திருமாவளவனுக்கு விழுப்புரம் தொகுதியை கொடுக்க தி.மு.க முன்வந்துள்ளது. ஆனால் இதனை ஏற்க திருமாவளவன் மறுத்து வருகிறார். வெளிப்படையாகவே சிதம்பரம் தொகுதி எனது தொகுதி என்றும் அந்த தொகுதியில் தான் போட்டியிடுவது உறுதி என்றும் கூறி வருகிறார் திருமா.

கூட்டணியில் தொகுதிப் பங்கிடு வெளிப்படையாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் திருமாவளவன் சிதம்பரத்தை தனது தொகுதி என்ற வெளிப்படையாக கூறுவது தி.மு.கவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே சிதம்பரம் தொகுதி குறித்து திருமா தினந்தோறும் பேசி வருவது தி.மு.கவினருக்கு எரிச்சலை அதிகமாக்கியுள்ளது. கூட்டணியில் இருந்து கொண்டு தொகுதி ஒதுக்கீட்டிற்கு முன்னதாக திருமா இப்படி பேசுவது தர்மமா என்று தி.மு.க மேலிட நிர்வாகிகள் கவலையில் உள்ளனர்.

இந்த நிலையில் திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்கு உரிமை கோரி பேசி வருவதற்கு கடலூர் மாவட்ட தி.மு.கவிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எந்த காரணத்தை முன்னிட்டும் சிதம்பரத்தை கூட்டணி கட்சிக்கு விட்டுத்தரக்கூடாது என்று கடலூர் நிர்வாகிகள் தி.மு.க மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கூட்டணி தர்மத்திற்கு எதிராக பேசி வரும் திருமாவளவனை கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என்றும் அவர்கள் புகார் மனுக்களை அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வருகின்றனர்.