Asianet News TamilAsianet News Tamil

குட்டிக்கரணம் போட்டாலும் திமுகவை எவராலும் அழிக்க முடியாது... மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்..!

மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க - நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள்.

DMK can never be defeated by anyone says mk stalin
Author
Tamil Nadu, First Published May 25, 2019, 1:43 PM IST

எவராலும் ஒருக்காலும் வீழ்த்த முடியாததது திராவிட இயக்கம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க - நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள். திராவிட இயக்கத்தால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தலைவர் கலைஞர் ஆகியோரால் பண்படுத்தப்பட்டு - பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் சீரிய இடம் உருவாக்கப்பட்டிருப்பது இந்திய அளவில் போற்றுதலுக்கு உரிய பொருள் ஆகியிருக்கிறது. DMK can never be defeated by anyone says mk stalin

ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தி.மு.க. கூட்டணி ஈர்த்திருக்கிறது. அத்தகைய மாபெரும் வெற்றியை அடைந்ததற்கு, தொடர்ந்து நல்லிதயங்களின் வாழ்த்துகள் பொழிந்த வண்ணம் உள்ளன. தோழமைக் கட்சிகளின் மதிப்புமிகு தலைவர்கள் கழகத் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு அன்புடன் வருகை தந்து வாழ்த்துகளைப் பரிமாறி மனமகிழ்ச்சி கொள்கிறார்கள். ஊடகங்களிடம் வெற்றிச் செய்தியினைப் பகிர்ந்துகொள்ளும் தோழமைக் கட்சித் தலைவர்களும் ஆதரவு அமைப்புகளின் தலைவர்களும், “தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் வகுத்த வியூகங்களே இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம். தோழமைக் கட்சிகளை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணியை அமைத்து, மோடிக்கு எதிரான வெற்றியைப் பெறுவதற்கு இந்தியாவிலேயே முதன்மையானவர் என்பதை ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார். தனது மாநிலத்திற்குள் பா.ஜ.க. நுழைய முடியாதபடி தடுத்து, நிறுத்திய ஒரு மாநிலக் கட்சித் தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும் வலுவாக இருப்பதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது” என மனம்திறந்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஆங்கில ஊடகங்கள் - அரசியல் நோக்கர்கள் என அனைத்துத் தரப்பிலும் இதே கருத்து எங்கணும் எதிரொலிக்கிறது. திராவிட இயக்கத்தை அழிக்க, எத்தனை வித்தைகள் செய்தாலும் எத்தனை பேர் குட்டிக்கரணம் போட்டாலும், இங்கே எடுபடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் தனிப் பெரும் தீர்ப்பு. தமிழகம்-புதுச்சேரியில் தி.மு.கழகமும் கூட்டணியும் 38 மக்களவைத் தொகுதிகளை வென்றிருக்கிறது. 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் 13 இடங்களைக் கழகம் கைப்பற்றியுள்ளது. DMK can never be defeated by anyone says mk stalin

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் தி.மு.க பெறுகிறது. 1971, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் கழகம் பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது. சட்டமன்றத்தில் நம்முடைய பலம் 101ஆக உயர்கிறது. அ.தி.மு.க.வசம் இருந்த 12 தொகுதிகளை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியிருப்பது, தமிழ்நாட்டின் இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாகும். இவற்றை செரிமானம் செய்துகொள்ள முடியாத ஆட்சியாளர்களும்-அரசியல் எதிரிகளும், ‘தி.மு.க.வின் நோக்கம் நிறைவேறவில்லை’ என தங்கள் புண்ணுக்குத் தாங்களே புணுகு தடவி புளகாங்கிதம் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள்.

மத்திய-மாநில ஆட்சியாளர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு துன்பத்தில் உழலும் தமிழ்நாட்டு மக்கள் நம்மை நம்பினர். பொதுக்கூட்டங்களில், நடைப்பயணங்களில், திண்ணைப் பிரச்சாரத்தில், தேநீர்க்கடை உரையாடலில் என நான் சென்ற இடமெல்லாம் தங்கள் வீட்டுப் பிள்ளையாக - சகோதரனாக - குடும்பத்தில் ஒருவனாகக் கருதி ஓடோடி வந்து அரவணைத்து அன்பைப் பொழிந்தனர். ஆதரவை உறுதி செய்தனர். தமிழ்நாட்டு மக்களின் வற்றாத அன்பும் வாஞ்சைமிகு ஆதரவுமே வாக்குகளாக மாறி இந்த வெற்றியைத் தந்துள்ளது. மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது.

நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்தளித்த வழியில், தேர்தல் களப் பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களாம் அன்பு உடன்பிறப்புகளும் இல்லாமல், இந்த வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது. ஆட்சியாளர்களின் அதிகார வரம்புமீறல்களை எதிர்கொண்டு, சரியான - தெளிவான - உறுதியான வியூகத்தை வகுத்து, அதனைக் கிஞ்சிற்றும் பிசகாமல் களத்தில் செயல்படுத்திய கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இந்த வெற்றியின் முக்கியப் பங்குதாரர்கள்.

ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புடன் - கொள்கை உறுதியுடன் - தோழமை உணர்வுடன் வகுத்த வியூகங்களும், அவற்றைச் செயல்படுத்துவதில் சுணக்கமின்றி ஆற்றிய சிறப்பான உழைப்புமே இன்று வெற்றியாக மலர்ந்திருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உண்ணாமல் உறங்காமல் ஓய்வு கொள்ளாமல் உழைத்த உடன்பிறப்புகள் அனைவரின் முயற்சியாலும் கிடைத்த இந்த வெற்றியை உச்சி மோந்து மெச்சிப் பாராட்டிட தலைவர் கலைஞர் அவர்கள் நம்மிடம் இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டதே என்ற ஏக்கத்துடன், அவரது நினைவிடத்தில், இந்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்குவதே எனது கடமை! DMK can never be defeated by anyone says mk stalin

தலைவர் கலைஞர் அவர்களின் தலைவர் பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தலைவர் தந்தை பெரியார் என திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களின் நினைவிடங்களில் வணக்கம் செலுத்தி, தி.மு.கழகக் கூட்டணிக்கு மக்கள் அளித்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்கியிருக்கிறேன். அந்த முப்பெரும் தலைவர்களிடமும் கொள்கை உறவுடன் நெருங்கிப் பழகி, திராவிட இயக்கத்தின் வரலாற்றில் முக்கால் நூற்றாண்டு காலமாகத் தன்னுடைய அரும்பெரும் பணியை ஆற்றி வரும் கழகத்தின் பொதுச்செயலாளர் - தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாத நிலையில் தந்தையின் இடத்திலிருந்து வழிகாட்டும் பெருந்தகையாளர் - உடல் நலிவுற்றிருந்தாலும் உள்ளம் வலிமையான இனமானப் பேராசிரியர் அவர்களை நேரில் சந்தித்து, “உங்களைப் போன்றவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த இயக்கத்தை அழிக்க நினைத்த எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் கட்டிக் காப்பாற்றி வெற்றியுடன் வந்திருக்கிறேன்” என்பதைத் தெரிவித்து, அவரின் வாழ்த்துகளையும் பெற்றுள்ளேன்.

மக்களுக்கெதிரான பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு விழிப்புடன் காவல்காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கைத் தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மாநில நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும் - பறிபோனவற்றை மீட்டெடுக்கவும்-ஜனநாயகம் காக்கவும் அமைதியான அறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும். மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு வியூகத்தை’ பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.கழகம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

 DMK can never be defeated by anyone says mk stalin

இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கபூர்வ அரசியலுக்கான காலம். மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது. அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் கண்ட இனம்-மொழிக்கான கனவு நனவாகும் காலம் நெருங்கி வருகிறது.தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.கழகத்தின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும் என கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios