தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. கடந்த முறை அந்தப் பெருமையை அதிமுக பெற்றிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் அந்தப் பெருமையை திமுக தட்டிப் பறித்துள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 92 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பிற கட்சிகள் 100 இடங்களைக் கைப்பற்றின. இந்தத் தேர்தலில் பாஜக மட்டும் தனியாக 290 இடங்களைப் பிடித்த பெரும் கட்சியாக நாடாளுமன்றத்தில் உருவெடுத்துள்ளது.


தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்தத் தேர்தலில் 44 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை அக்கட்சி 51 தொகுதிகளில் வெற்றி பெற்று அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. நாடாளுமன்றத்தில் இக்கட்சி இரண்டாவது பெரிய கட்சியாக வந்துள்ளது.


பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் திமுக போட்டியிட்ட 20  தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் இடம் பிடித்த மதிமுக, விசிக (ரவிக்குமார்), ஐஜேகே ஆகிய கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றன. எனவே நாடாளுமன்றத்திலும் இக்கட்சிகளாஇச் சேர்ந்தவர்கள் திமுக உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். அந்த வகையில் திமுக நாடாளுமன்றத்தில் 23 பேருடன் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.


திமுகவுக்கு அடுத்ததாக திரிணாமூல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தலா 22 இடங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களைப் பிடித்த அதிமுக, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கியது. அந்தப் பெருமையை இந்தத் தேர்தலில் திமுக பெற்றுள்ளது. அதிமுகவைத் தொடர்ந்து  தற்போது திமுகவும் அந்தப் பெருமையைப் பெற்றுள்ளது.