புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சி சென்று இருந்தார். கலைஞர் அறிவாலயத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அவர் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார். இதன் பிறகு அவர் புதுக்கோட்டையில் சில இடங்களை பார்வையிடுவதற்காக புறப்பட்டுச் சென்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் பாதிக்கப்பட்ட மக்களை ஸ்டாலின் சந்திக்க அப்பகுதி தி.மு.கவினர் ஏற்பாடு செய்திருந்தனர். புயலால் அனைத்தையும் இழந்த மக்கள் பலர் ஸ்டாலினை சந்தித்து முறையிட கந்தர்வகோட்டையில் காத்திருந்தனர். ஸ்டாலின் வாகனம் அந்த வழியாக வந்த போது பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர்.

இதனால் ஸ்டாலினால் தனது காரில் இருந்து கீழே இறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் கூட்டம் மிகவும்அதிகமாக ஸ்டாலின் காரை பொதுமக்கள் ஏராளமானோர் சூழ்ந்து கொண்டனர். இதனால் கார் அந்த இடத்தில் இருந்து புறப்பட முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக ஸ்டாலினுடன் வந்த பாதுகாவலர்கள் மக்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

ஆனால் பெண் ஒருவர் தொடர்ந்து ஸ்டாலினிடம் மனு கொடுக்க முன்னேறிச் சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கட்சி நிர்வாகிகள் அந்த பெண்ணை தள்ளிவிட்டுள்ளனர். இதனால் அந்த பெண் கீழே விழுந்தத்தில் மூஞ்சி உடைந்து ரத்தம் கொட்டியது. மனு கொடுக்க வந்த தன்னை தி.மு.கவினர் அடித்து காயப்படுத்திவிட்டதாக அந்த பெண் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்வதாக இருந்தது.