அதிரடியாக ராஜினாமா செய்த பழனிவேல் தியாகராஜன்... சீனுக்கு வந்த டி.ஆர்.பி.ராஜா.. திமுகவில் மாறிய காட்சிகள்.!
இவருடைய தந்தையும் எம்.பி.யுமான டி,ஆர். பாலு, கட்சியில் மாநில அளவில் பொருளாளராக இருக்கிறார். தற்போது அவருடைய மகனும் மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி.ராஜா அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில், தற்போது கட்சிப் பணி வழங்கப்பட்டுள்ளது.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி.ராஜாவை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளருமான அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழக நிதி அமைச்சரான பி.டி,.ஆர். பழனிவேல் தியாகராஜன் திமுகவில் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி. விங்) அணிச் செயலாளராக இருந்தார். அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டதால், திமுக ஐடி விங் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கட்சிப் பதவியிலிருந்து விலகப் போவதாகவும் இரண்டு மாதங்களுக்கு முன்பே, அந்த அணியின் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பழனிவேல் தியாகராஜன் முறைப்படி தனது கட்சிப் பணியை ராஜினாமா செய்து கட்சி தலைமைக்கு அனுப்பினார். ஆனால், கட்சி வ\ற்புறுத்தல் பேரில்தான் தனது பதவியை தியாகராஜன் ராஜினாமா செய்ததாகவும் அந்தப் பதவியில் டி.ஆர்.பி.ராஜாவை நியமிக்க முடிவு செய்ததால், அழுத்தம் தரப்பட்டதாகவும் தகவல்கள் கசியவிடப்பட்டன.
மேலும் தியாகராஜனுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே விரிசல் என்றும் தகவல்கள் பரப்பப்பட்டன. தியாகராஜனின் ராஜினாமா குறித்து எந்தத் தகவலும் கட்சித் தலைமையிலிருந்து வெளியாகாததால், சஸ்பென்ஸ் நீடித்தது. இந்நிலையில் திமுக ஐ.டி. விங் செயலாளராக மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜாவை நியமித்து அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவருடைய அறிவிப்பில், “திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசுப் பணிகளில் முழுக்கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக கழகத்தலைவர்களிடம் கொடுத்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து கழக சட்டத்திட்ட விதி 31-பிரிவு 19-ன் படி அவருக்கு பதிலாக கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார்.
அயலக அணிச் செயலாளராக இருந்த டி.ஆர்.பி.ராஜா, கழக தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதால், கழக சட்டதிட்ட விதி 31- பிரிவு: 20-ன் படி அவருக்கு பதிலாக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா கழக அயலக அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் கட்சிப் பணியிலிருந்து பழனிவேல் தியாகராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது திமுக ஐடி விங் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பி.ராஜா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கக்கூடியவர். அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உடனே பதிலடிக் கொடுக்கக் கூடியவர். இவருடைய தந்தையும் எம்.பி.யுமான டி,ஆர். பாலு, கட்சியில் மாநில அளவில் பொருளாளராக இருக்கிறார். தற்போது அவருடைய மகனும் மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி.ராஜா அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில், தற்போது கட்சிப் பணி வழங்கப்பட்டுள்ளது.