ரஜினியை கோழை என்று விமர்சித்த திமுக ஆதரவாளருக்கும் ரஜினியின் அதி தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தனியார் தொலைக்காட்சி ஒன்று, ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவருடைய அரசியல் வருகை தொடர்பான விவாத நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி ஆதரவாளரான கராத்தே  தியாகராஜன், இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத், திமுக ஆதரவாளரும் எழுத்தாளருமான பாலா, விசிகவின் வன்னியரசு ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பாலா, “ஸ்டாலின் மிசா காலத்திலிருந்து கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் இருந்துவருகிறார். சினிமாவில் நடித்து முடித்துவிட்டு ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வருகிறார் ரஜினி” என்று பேசியபடி “ரஜினி ஒரு கோழை” என்று விமர்சித்தார்.


இதனையடுத்து அரங்கில் அமர்ந்திருந்த கராத்தே தியாகராஜன் ஓங்கிய குரலில் எம்பி குதித்தார். கோழை என்று எப்படி சொல்லலாம் என்று பொங்கினார். ஸ்டாலினை தளபதி என்று சொல்கிறீர்களே, அவர் எந்த நாட்டுக்கு தளபதி என்று கூச்சலுக்கு இடையே கேள்வி எழுப்பினார் கராத்தே தியாகராஜன். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் அமைதிப்படுத்த நெறியாளர் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. 
அப்போது அங்கே இருந்த வன்னியரசு, “ரஜினி அரசியலுக்கு இன்னும் வரவில்லை. அதற்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் செயல்பட மறுக்கிறார்கள். இவர்கள் அரசியலுக்கு வந்தால், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்று தெரிவித்தார். இந்தக் கூச்சல் குழப்பதால் நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்பே, அதை முடிக்கும் நிலைக்கு நெறியாளர் தள்ளப்பட்டார்.