புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது. ஆனால், சமீப காலமாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. காங்கிரஸ் கூட்டிய கூட்டங்கள், போராட்டங்களை கூட்டணி கட்சியான திமுக முற்றிலும் தவிர்த்தது. புதுச்சேரி முதல்வரையும் அமைச்சர்களையும் திமுகவினர் விமர்சித்து பேசி வருகின்றனர். இந்த மோதல் காரணமாக புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகும் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தலைமையில் கூட்டணி என்று புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான சிவா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற திருவள்ளுவர் தின நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “தற்போது புதுச்சேரி திமுக மேலிடப் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் காலாப்பட்டில் செயல் வீரர்கள் கூட்டத்தை விரைவில் கூட்ட உள்ளோம். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். கூட்டணியில் எந்தக் கட்சி வந்தாலும் திமுகதான் தலைமை தாங்கும். 
திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காகப் பல்வேறு கட்சியினர்  அண்ணா அறிவாலயத்தின் கதவைத் தட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்களின் எண்ணத்தின்படி திமுகவும் மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் நூறு சதவீதம் திமுக தலைமையிலான ஆட்சியே அமையும்.” என்று சிவா தெரிவித்தார்.