திமுக கூட்டணி உடையும் என்ற கனவுகள் எல்லாம் பகல் கனவாகவே முடியப்போகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே ஏற்பட்ட சலசலப்பு பற்றி பேட்டி அளித்தார். “திமுக கூட்டணியில் பிரச்னையை கூறிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியே அதற்கு தீர்வு கண்டிருக்கிறார். திமுக தலைமையிலான இந்தக் கூட்டணி மதசார்பற்ற கூட்டணி. இது வெறும் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. 3 ஆண்டுகளாக மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராட்டங்களை இக்கூட்டணி நடத்தியிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
திமுக தலைமையிலான இந்த அணி கண்டிப்பாக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளை எல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை. திமுக கூட்டணி உடையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பகல் கனவு கண்டு வருகிறார். அவர் அப்படி நிறைய கனவுகளை கண்டு வருகிறார். அந்தக் கனவுகள் எல்லாம் பகல் கனவாகவே முடியப்போகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஜனநாயக படுகொலை நிகழ்த்தியது. அதையும் மீறி ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் கூட்டணி கட்சி தர்மம் சில இடங்களில் மீறப்பட்டுள்ளது. அதுபோன்ற பிரச்னைகள் விரைவில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் பேசி சரி செய்யப்பட்டுவிடும். திமுக தலைமையிலான இந்த மதசார்பற்ற கூட்டணி தமிழகத்துக்கு தேவையான ஒரு கூட்டணி ஆகும்.  விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற பகுதி உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.