திமுகவிலிருந்து நிறைய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரகூடும் எனவும், ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அந்த முடிவு எடுக்காது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியாமல் தவித்த மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது: அரசியலில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம் எனினும் அதைத் தாண்டி அரசியல் நாகரிகம் கருதி முதலமைச்சர் தாயாரின் மறைவுக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். 

கச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு. அதற்கான முயற்சியை அம்மா அரசு எடுத்தது. அக்கட்ச தீவை தாரை வார்த்தது திமுக தான், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சர் மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டியது ஆளுநரின் கட்டாயமாகும். விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என நம்புகிறேன். சட்டமன்ற  தேர்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும், திமுக என்பது பிரேக் டவுன் ஆன கட்சி, அது ஒழுங்காக ஊர் சென்று சேராது. ஆனால் அதிமுக என்பது சூப்பர் பாஸ்ட் ரயில், ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகளை செய்து வருகிறது. மீண்டும் 2021ல் கழக ஆட்சி அமையும், தேர்தல் பணிகளை ஏற்கனவே கழகம் ஆரம்பித்துவிட்டது. 

தேர்தல் நேரத்தில் உதய சூரியன் அஸ்தமித்து இல்லாத அளவிற்கு காணாமல் போய்விடும். ஸ்டாலின் ஆட்சிக்கு வரப் போவதில்லை என தெரிந்தே அவர் ஆட்சிக்கு வந்தால் அம்மா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் அமைப்பேன் என கூறி வருகிறார். அம்மா மரணம் குறித்த உண்மை நிலையை நாட்டுக்கு தெரியப்படுத்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் மரணத்திற்கு யார் காரணம் என்பது தெரிய வரும். அதேபோல் திமுகவில் இருந்து நிறைய காட்சிகள் அதிமுகவிற்கு வரக்கூடும், ஆனால் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் அந்த முடிவு எடுக்காது. பிரேக் டவுன் ஆன திமுகவிலிருந்து எந்தெந்த கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வருகிறது என்பதை எல்லாம் இப்போதைக்கு வெளியில் கூற முடியாது. தேர்தல் நேரத்தில் அது தெரியவரும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.