நீண்டகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் மிக மிக கேவலமான முறையில் விவாதத்தில் பங்கேற்று வருவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜோதிமணி விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

பிரதமர் மோடியை மக்கள் இன்னும் கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி ஜோதிமணி பேசியதற்கு பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் ‘கேவலமான பெண், மூன்றாம் தர பெண்’ என விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்தன. இந்நிலையில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக, இயூமு லீக், மமக, கொமதேக, இஜக, திக, திராவிடர் இயக்க தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற மக்களவை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை இழிவுபடுத்துகிற வகையில் பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் பேசியதை அநாகரீகத்தின் உச்சகட்டமாக கருதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். நீண்டகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் மிக மிக கேவலமான முறையில் விவாதத்தில் பங்கேற்று வருவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வரம்புமீறி நாகரிகமற்ற முறையில் பேசிய கரு.நாகராஜனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் இருந்து நெறியாளர் முற்றிலும் தவறிவிட்டார் என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறோம்.
தொலைக்காட்சி விவாதத்தில் மக்களவை உறுப்பினர் என்றோ, பெண் என்றோ பாராமல் ஜோதிமணியை தரம்தாழ்ந்து பேசிய கரு.நாகராஜனை கண்டிக்கிற வகையில் தொலைக்காட்சி செயல்படாததை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே பாஜகவினர் பங்கேற்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சி விவாதங்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று அறிக்கையில் கோபண்ணா தெரிவித்துள்ளார்.