திமுக கூட்டணியில் நிலவும் அதிருப்தியால் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

துரைமுருகன், பொன்முடி ஆகியோரது மகன்களுக்கு சீட் கொடுத்ததால் அதிருப்தியிலுள்ள திமுக தொண்டர்கள் சப்போர்ட் செய்ய மறுப்பதால் வேலூர், கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் அவர்களது வாரிசுகள் திணறி வருகின்றனர். பொங்கலூர் பழனிசாமிக்கு சீட் கிடைக்காததால் தி.மு.க. வேட்பாளருக்கும், கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து வருகிறார்.

சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் மகனுக்கு சீட் கிடைக்காததால், வீரபாண்டியார் ஆதரவு வன்னியர்கள் அமமுக வேட்பாளர்  செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். தயாநிதிமாறன் போட்டியிடும் மத்திய சென்னை உடன்பிறப்புகளின் அதிருப்தி செயல்வீரர்கள் கூட்டத்திலேயே எதிரொலித்தது. 

திமுக நிர்வாகிகள் தேர்தல் செலவுகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களிடம் எதிர்பார்க்கின்றனர். அதனை நிறைவேற்ற முடியாமல் ஓரிரு வேட்பாளர்கள் திணறுவதால் அதிருப்தி நிலவி வருகிறது. சிவகங்கையில் சீட் மறுக்கப்பட்ட சுதர்சன நாச்சியப்பன், ப.சிதம்பரம் தரப்பை வெளிப்படையாகவே புறக்கணித்துள்ளார். இதனால் ப.சிதம்பரம் மகனும் சிவகங்கை வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம், மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார்.

அதேபோல, சிட்டிங் எம்.எல்.ஏ. வசந்தகுமாருக்கு கன்னியாகுமரியில் சீட் தந்து, தேவையின்றி சட்டமன்ற பலத்தைக் குறைப்பதை திமுக விரும்பவில்லை. கிருஷ்ணகிரியிலும் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாருக்கு திமுக தொண்டர்கள் ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறப்படுகிறது. விழுப்புரம் திமுகவினர் பொன்முடி மகன் போட்டியிடும் கள்ளக்குறிச்சிக்குப் போய் வேலை பார்ப்பதால் விழுப்புரம்  விசிக வேட்பாளர் மயங்கித் தவிக்கிறார்.