திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றே தெரியாத நிலையில், போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் திமுக சின்னத்தில் நிற்கப்போவதில்லை என்று அக்கட்சி முடிவு செய்திருக்கிறது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மனித நேய மக்கள் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலைபோல அல்லாமல் இந்த முறை திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அது மட்டுமல்ல, இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிடும் முடிவிலும் திமுக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனால், கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த சீட்டுகளையே திமுக ஒதுக்கீடு செய்யும் என்ற பரவலான கருத்தும் உள்ளது. சிறு கட்சிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு வழங்கலாம் என்ற யோசனையும் திமுக தலைவர்கள் மத்தியில் உள்ளது. 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நீண்ட நாள் கூட்டணி கட்சி. காதர் மொய்தீன் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் என்ற வகையில் அந்தக் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, கடந்த காலங்களில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வரலாறும் உண்டு. 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு சீட்டு ஒதுக்கும்பட்சத்தில் மனிதநேய மக்கள் கட்சிக்கும் சீட்டு ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ம.ம.க.வில் தீவிர தேர்தல் களப்பணி ஆற்றக்கூடிய இளைஞர்கள் ஏராளம் உள்ளதால், அந்தக் கட்சிக்கும் ஒரு சீட்டு ஒதுக்கலாம் என்றே திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. திமுகவின் உள் ஒதுக்கீடாக ம.ம.க.வுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கும்பட்சத்தில், அந்தக் கட்சியை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வாய்ப்பு கொடுக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், தேர்தலில் போட்டியிட்டால், தங்களுடைய சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் ம.ம.க. உறுதியாக உள்ளது. எக்காரணம் கொண்டும் பிற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்பதை ஒரு கொள்கையாக அக்கட்சி வைத்திருக்கிறது. இதுபற்றி அக்கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “எதற்காகவும் பிற கட்சி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதில் உறுதியாகவே இருக்கிறோம். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், அதை நிச்சயம் ஏற்கமாட்டோம்” என்று தெரிவித்தார்கள்.