திமுக கூட்டணியில் பாமக., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்க்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'இரு கட்சிகளையும் சேர்க்கக்கூடாது' என திமுக மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பான ஸ்டாலினின் சமரசத்தையும் ஏற்க மறுத்து அவருடன் காரசார விவாதமும் நடத்தியுள்ளனர். அதனால் குழப்பத்தை தவிர்க்கும் வகையில், இரு கட்சிகளுக்கும் இடமில்லை என்ற அறிவிப்பு திமுகவில் இருந்து விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்  தேர்தலில் தி.மு.க., தலைமையில்  அமைந்துள்ள கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக - கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக், உட்பட ஒன்பது கட்சிகள் அணி சேர தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக  பொருளாளர் துரைமுருகன் தனியார் தொலக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் அதிக 'சீட்'களை கேட்கும் கட்சிகள் வெளியேறும் என்றும் தேர்தல் நேரத்தில் சில கட்சிகள் உள்ளே வரும் என்றும் கூறி புயலைக் கிளப்பியுள்ளார். 

திமுக  அணியில் பாமக  சேரும் என்றும்  விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும்' என்பதை அவர் சூசகமாக தெரிவித்ததாக கூட்டணி கட்சியினர் கருதுகின்றனர். மதிமுக, இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் துரை முருகனின் பேச்சால் அதிருப்தி மடைந்துள்ளனர்.

இதனிடையே ஸ்டாலின் மருமகன் சபரீசன் , ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் 'ஒன் மேன் குரூப்'பை சேர்ந்த நிர்வாகி ஒருவரும் இணைந்து பாமகவிடம் ரகசிய பேச்சு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த  குறித்து தகவல் அறிந்த திருமாவளவன் கோபம் அடைந்துள்ளார்.

அதனால்தான் பாமக  இடம் பெறும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பெறாது என்றும், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன்' எனவும்  அவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் பாமகவை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்பதில் திமுக மகளிர் அணி மாநில செயலாளர்  கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராஜா, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு போன்றவர்களும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர். அதேநேரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை  சேர்க்காமல் பாமகவை மட்டும் சேர்க்கலாம் என துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றவர்கள் விரும்புகின்றனர்.

இரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பதில் திமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ள இரு தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்த ஸ்டாலின் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த நேரத்தில் துரைமுருகன், ஸ்டாலின் மற்றும் சில தலைவர்கள்  இடையே காரசார விவாதமும் நடந்துள்ளது. இதையடுத்து குழப்பத்தை தவிர்க்கும் வகையில் தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் வி.சி., கட்சிகளுக்கு இடமில்லை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என திமுக தரப்பு தகவ்லகள் தெரிவிக்கின்றன.