தூத்துக்குடி இன்று தேசிய அரசியலில் மிக முக்கிய தொகுதியாகிவிட்டது. காரணம்?...தி.மு.க.வின் மாநில மகளிரணி தலைவரும், ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இவரை எதிர்த்து பி.ஜே.பி.யின் தமிழக தலைவரான  தமிழிசை களமிறங்குவதும் அநேகமாக ஓ.கே.வாகிவிட்டது. இந்நிலையில் தமிழிசை இங்கே போட்டியிட்டால் அநாயசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்! என தி.மு.க. கொக்கரிப்பதுதான்  ஹைலைட்டே. 

இரண்டு கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவிக்கவில்லைதான். ஆனாலும் கனிமொழி கிட்டத்தட்ட கடந்த இரண்டு மாதங்களாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில்தான் முகாமிட்டு இருக்கிறார். தன் கட்சி சார்பாகவும், எம்.பி. எனும் முறையிலும் ஏகப்பட்ட விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார். மேலும் விருப்ப மனுவில் அவர் தூத்துக்குடி என குறிப்பிட்டே கொடுத்துள்ளார் என்றும் தகவல். இதனால் கனி இங்கே வேட்பாளராவது உறுதி. 

கனிமொழி இங்கே நிற்கும் நிலையில் தமிழிசையும் களமிறங்குறார். கடந்த ஏழாம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கி  கட்சி நிகழ்வுகள் பலவற்றில் கலந்து கொண்டார். இதனால் தூத்துக்குடி பி.ஜே.பி. உற்சாகமாகி இருக்கிறது.

 இந்த இரண்டு பெண்களும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை குறிவைத்து களமிறங்க, ‘அங்கே அண்ணாச்சிகளின் வாக்கு வங்கி ரொம்ப பெருசு’ என்று யாரோ சொல்லியதாக தகவல். 

மூன்று நாட்கள் களப்பணியில் தமிழிசை தட்டி எறிந்துவிட்டதாக தாமரைக்கட்சி கூத்தாடும் நிலையில், தி.மு.க. சார்பாக அதை மறுத்துப் பேசும் தூத்துக்குடி  தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் “கனிமொழியின் வெற்றி தூத்துக்குடியில் உறுதி செய்யப்பட்டுவிட்டதுண்ணே. வித்தியாசம் எவ்வளவு? அப்படிங்கிறதுதான் இப்போ மேட்டரே. 

அ.தி.மு.க. கூட்டணியில, பி.ஜே.பி.தான் இங்கே போட்டி போடப்போவுதுன்னு சொன்னாக. தாமரை சின்னத்துல யாரு நின்னாலும் நாங்க ரெண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்துல ஜெயிப்போமுன்னு நினைச்சோம். ஆனா இப்போ என்னடான்னா தமிழிசையே இங்கே போட்டி போடப்போறாங்கன்னு சொல்றாவ.

இதைக்கேட்டு நாங்க சந்தோஷத்துல குதிச்சுக் கெடக்குறோம்ணே. ஏம்னா, வேற யாராச்சும் போட்டி போட்டா கூட ரெண்டு லட்சம் வித்தியாசத்துலதாம் ஜெயிப்போம், ஆனா தமிழிசைன்னாக்க மூணு லட்சம் வாக்குகள் வித்தியாசத்துல  ஜெயிச்சுட்வோம்.

 அந்தம்மா மேலே தூத்துக்குடி மக்கள் அம்பூட்டு கோவத்துல இருக்காவ. ஏதோ குருவிய சுடுறா மாதிரி ஸ்டெர்லைட் போராட்ட மக்களை மோடி தர்பாரின் உத்தரவின் பேர்ல இந்த தமிழக அரசாங்கம் சுட்டதுக்கு பழிவாங்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குல்லா? 
அட நோட்டாவ முந்த முடியுமான்னு சொல்லச்சொல்லுங்க தமிழிசைய!” என்று ஏகத்துக்கும் கலாய்த்திருக்கிறார். 
இதையெல்லாம் கேள்விப்பட்ட தமிழிசை ‘என் பதிலை செயலில் காட்டுகிறேன்!’ என்று சவால் விடுகிறார். 
சரியான போட்டிதான் போங்கள்!