500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டது பொதுமக்கள் மட்டுமல்ல 4 தொகுதி இடைதேர்தலில் கழகப்பணியாற்ற சென்ற உடன் பிறப்புகளும் , ரத்தத்தின் ரத்தங்களும் என்று கூறப்படுகிறது.
1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நாடுமுழுதும் அன்றாட சிலவுகளுக்கே பொதுமக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மாற்று செலவாக புதிய 2000 ரூபாய் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்துக்கு உபயோகப்படும் நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பொதுமக்களே இந்த நிலை என்றால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தண்ணீராக செலவழிக்கும் அரசியல் கட்சிகள் நிலை என்னவாகும். அதுவும் தமிழகத்தில் 3 தொகுதிகள் , பாண்டிச்சேரியில் 1 தொகுதி என நான்கு தொகுதிகளுக்கான இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு திமுக , அதிமுக தொண்டர்கள் , கழக முன்னணியினர் மாற்றுகட்சியினர் களமிறங்கி வேகமாக செயல்பட்டு வருகின்றனர்.
தேர்தல் என்றாலே பணம் தண்ணீராக செலவழியும். ஏற்கனவே பணம் தண்ணீராக செலவழிந்ததால் தான் தேர்தலே நிறுத்தப்பட்டு இப்போது தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் நான்கு தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு உள்ளனர்.

இதே போல் திமுகவும் வரிந்து கட்டிகொண்டு நிற்கிறது.சாதாரணமாக இது போன்ற நேரங்களில் கழக ரத்தத்தின் ரத்தங்களும் , உடன்பிறப்புகளும் துள்ளி குதித்து கிளம்புவார்கள் . காரணம் அத்தனை நாட்களும் வருமானம் , சாப்பாடு இத்யாதி இத்யாதியுடன் கட்சிப்பணி ஆற்றலாம். இது போன்று வருபபவர்களுக்கு ரூம்போட்டு , அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து பிரச்சாரத்தில் இறக்குவார்கள்.
இந்நிலையில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவித்ததால் கட்சிவேலை செய்ய வந்தவர்கள் பாடு திண்டாட்டமானது. சாதாரண சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் போனது. சிறிய செலவுகள் கூட செய்ய முடியாமல் பெரிய பிரச்சனையை கழக உடன்பிறப்புகள் , ரத்தத்தின் ரத்தங்கள் கடுமையான சிக்கலை அனுபவித்து வருகின்றனர்.

1000 , 500 க்களாக கட்டுகட்டாக இருந்து என்ன பயன் அதை வைத்து ஒரு டீ கூட குடிக்க முடியவில்லையே என புலம்புகின்றனர். தினசரி சகல கவனிப்புகளுடன் 1000 முதல் 2000 வரை கையில் பேட்டா கிடைக்கும். தற்போது நோட்டுகள் செல்லாததால் வருமானம் போச்சு . கடன் சொல்லும் வேட்பாளர் வென்றால் பிரச்சனை இல்லை தோற்றுப்போனால் ஓசியில் கழகப்பணி ஆற்றியது போலாகுமே என கலங்கி நிற்கின்றனர்.
இது கழக கண்மணிகளை மட்டும் அல்ல பாஜக போன்ற கட்சியினரையும் பெரிதாக பாதித்துள்ளது. வலி தெரியாமல் அழுது கொண்டிருக்கின்றனர். மாப்பு மோடி வச்சிட்டாருடா ஆப்புன்னு புலம்ப துவங்கியுள்ளனர்.
