நடிகர் கமலஹாசன் மீது வன்மம் கொண்டு கருத்து தெரிவிப்பதும் மிரட்டுவதும் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனால் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, பீகார் மாநிலத்தை விட தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் உள்ளது எனவும், சிஷ்டம் சரியில்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கு தமிழகத்தின் ஆளும் கட்சி அமைச்சர்கள் பொங்கி எழுந்து தமது கருத்துகளையும் எச்சரிக்கைகளையும் கமலுக்கு விடுத்து வருகின்றனர்.

அதன்படி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காசு பணத்துக்காக கமல் எதையும் செய்வார் எனவும், அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிமுக அரசு திரையுலகினர் 457 பேருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளதாகவும், இதனை பாராட்ட மனமில்லாத கமலஹாசன் ஆதாரமின்றி அரசு மீது குற்றம் சாட்டி வருவதாக தெரிவித்தார்.

அவர் உடனே இத்தகையான அவதூறு குற்றச்சாட்டுகளை நிறுத்தி கொள்ளா விட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் இதுகுறித்து மிரட்டல் விடுத்த தமிழக அமைச்சர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கமல் மீது வன்மம் கொண்டு கருத்து தெரிவிப்பதும் மிரட்டுவதும் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல் எனவும், கமலின் கருத்து தமிழக மக்களின் கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழல் அரசு என தமிழக மக்கள் கூறி வருவதை கமல் வெளிப்படுத்தியுள்ளதாகவும், ஆட்சியின் அவ லட்சணத்தை வெளிப்படுத்தும் உரிமை கமல் உட்பட வாக்களித்த அனைவருக்கும் உண்டு எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.