பேக்கரி தீவிபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்துக்கு நிதியுதவியை அதிகரிக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரி ஒன்றில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஏகராஜ் தீயில் கருகி உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் 47 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விபத்தில் பலியான தீயணைப்பு வீரரின் குடும்பத்துக்கு ரூ. 13 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பலத்த தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் லேசான தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த ஸ்டாலின் பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சிகிச்சை சரிவர வழங்கபட வில்லை என சிலர் புகார் கூறியதாகவும், காயமடைந்த பலர் தனியார் மருத்துமணை நோக்கி செல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் தீவிபத்தில் உயிரிழந்த ஏகராஜ் குடும்பத்துக்கு நிதியுதவியை அதிகரித்து தர வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.