ஹைட்ரோ கார்பன், ஒஎன் ஜிசிக்கு எதிராக போராடிய சேலத்தை சேர்ந்த மாணவி மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் படித்துவரும் மாணவி சேலத்தை சேர்ந்த வளர்மதி. இவர், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் சேலம் அரசு மகளிர் கலை கல்லூரிக்கு அருகில் விநியோகம் செய்தார்.
இதனால் நக்சலைட்டுகளுக்கு ஆட்கள் சேர்ப்பதாக குற்றம் சாட்டி இவரை கடந்த 13 ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவரின் மீது திடீரென குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 

இதற்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தனது முகனூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அதில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் மீத்தேன் திட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து “இயற்கையை காப்பாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் போராடி வந்த சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் இந்த “குதிரை பேர” அரசு கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். 
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம், கதிராமங்கலத்தில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றெல்லாம் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒரு பக்கம் வாக்குறுதி கொடுத்து விட்டு, இன்னொரு புறம் ஜனநாயக ரீதியாக போராடும் மாணவி, பேராசிரியர் உள்ளிட்டோர் மீதும், கிராம மக்கள் மீதும் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 
இந்த ஆட்சி, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களின் மீது அடக்குமுறையை ஏவி விடுவதாகவும், தான் தோன்றித்தனமாகவும், அராஜகமாகவும் கைது செய்து குண்டர் சட்டத்தை பிரயோகிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்பு போராடியதற்காக மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது; ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுரம் கொடுத்ததற்காக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது; கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட கிராம மக்களை ஜாமினில் விடுவிக்கவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு காவல்துறை வாதிடுவது. இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லாம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை விமர்சிப்பவர்கள் மீது குதிரை பேர அரசு தொடுக்கும் போர் போல் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். 
ஆகவே காவல்துறை மூலம் அடக்குமுறையில் ஈடுபடும் போக்கை உடனடியாக இந்த அரசு கைவிட வேண்டும் எனவும், சேலம் மாணவி வளர்மதி, திருமுருகன் காந்தி ஆகியோருக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.