Dmk Action Leader M.k.Stalin Slams Cheif Minister Edapadi Palanisamy
டெல்லியில் தமிழக நலனைப்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசவில்லை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடனில் தத்தளிக்கும் தமிழகத்தின் நிலையை மாற்ற முயலாமல் நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீணடித்துள்ளார். தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல எடப்பாடி தவறி விட்டார்."
"தமிழகத்தில் "விஷன் 2023" திட்டத்தை செயல்படுத்த முதல்வர் துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை.குடிநீர் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை, சாலைவசதிகளும் இல்லை. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை அளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்லி இருக்கிறார். "

"தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய பழனிச்சாமி நிதி ஆயோக் கூட்டத்தில் பழனிச்சாமி கோரிக்கை வைக்கவில்லை. தமிழக அரசின் மோசமான நிதி மேலாண்மையால் தமிழகம் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது."
"அண்டை மாநிலங்கள் தடுப்பணை கட்டுவது குறித்து பழனிச்சாமி இதுவரை வாய்திறக்கவில்லை.தமிழகத்தில் நதிநீர் இணைப்பு திட்டங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் பணிகளை முக்கால்வாசி திமுக ஆட்சியில் இருந்த போது முடித்தது"
"மாநில உரிமைகள் பற்றி பேசினால் தன் பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்ற அச்சத்தில் பழனிச்சாமி ஆயோக் கூட்டத்தில் பேசி உள்ளார். வெள்ளம், வறட்சி, புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க 88 ஆயிரம் கோடி தேவை என கூட்டத்தில் பழனிச்சாமி பேசவில்லை"
"நானும் கச்சேரிக்கு போனேன் என்ற போக்கில் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டுள்ளார். தமிழகத்திற்கு நலன் பயக்கும் திட்டங்கள் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பேசாத பழனிச்சாமியை திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்". இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
