குரூப் 1 தேர்வு ஊழல் மூலம் வந்த 85 அதிகாரிகளைத்தான் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி பயன்படுத்தியதாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டியுள்ளார். 
குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு அம்பலமாகி உள்ளதால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் கேள்விக்குறியாகி உள்ளன. தேர்வாணைய பணியாளர்களும் முகவர்களும் கூட்டணி அமைத்து தங்களுக்கு வேண்டியப்பட்டவர்களை முறைகேடு செய்து தேர்வி வெற்றி பெற வைத்துள்ள சம்பவம் அரசு வேலைக்காக நேர்மையாகப் போராடிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது கண்ணியமான அமைப்பு. அந்த இடத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள்தான் தமிழக நிர்வாகத்தை நடத்துகிறார்கள். அரசை நடத்துவதே அவர்கள்தான். அப்படிப்பட்ட டி.என்.பி.எஸ்.சியில் இவ்வளவு முறைகேடு நடந்துள்ளது என்றால், அதிமுக ஆட்சியில் ஊழல் உச்சத்துக்கு போய்விட்டது. 
குரூப் 4 மட்டுமல்ல, இதே போல இன்னொரு ஊழலும் நடந்துள்ளது. குரூப் 1 தேர்வு முடிவுகள்  நீதிமன்றம் வரை சென்றது. இந்த அரசு அந்த வழக்கை திரும்ப பெற்றுவிட்டது. குரூப் 1 மூலம் வந்த 85 அதிகாரிகளைத்தான் இப்போது உள்ளாட்சி தேர்தலில் பணியில் போட்டார்கள். ஊழல், தவறான வழியில் பதவிக்கு வருபவர்கள் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என்று ஆளுங்கட்சியினர் நினைக்கின்றனர். அது இன்று முடிவுக்கு வந்துள்ளது. அரசு ஊழியர்களிலும் இது போன்ற தவறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.