நடந்து முடிந்த தேர்தலானது ஆச்சரியங்கள், ஆக்‌ஷன்கள், அதிர்ச்சிகள், குழப்பங்கள், சந்தோஷங்கள்...என்று எல்லா உணர்ச்சிகளும் ஒருங்கே கலந்த ஒரு ஜனரஞ்சக மசாலா சினிமாவாக இருந்தது என்பதில் இரண்டாவது கருத்தில்லை. 

பிரசார பரபரப்பு மற்றும் நெருக்கடியில், சில தலைவர்களின் யதார்த்த முகங்களும் வெளிப்பட்டன. மறைக்க முடியாமலும், மறைப்பதற்கு வழியில்லாமலும் அந்த விஷயங்கள் வெளிப்பட்டன. அதில் ஒன்றுதான் ஒரு நாள் பிரசார கூத்தின் மூலம் விஜயகாந்தின் இயலாமை வெளிப்பட்ட விஷயம். தே.மு.தி.க. துவக்கப்பட்டதன் பின் தமிழக தேர்தல் பிரசாரம் என்றாலே விஜயகாந்தின் அதிரடி தூக்கலாக இருக்கும். எதிர்க்கட்சிகளை ஏக வசனத்தில் பொளப்பது, சொந்த கட்சி வேட்பாளரையே நாலு சாத்து சாத்துவது என்று அவரது ஆட்டபாட்டங்கள் செம்ம ஜாலியாக இருக்கும். ஆனால் பாவம் உடல் நல குறைபாட்டினால் இந்த முறை பிரசாரத்துக்கே வரவில்லை. 

இதில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பெரும் வருத்தம். இதனால், ‘கேப்டன் இல்லாத குறையை பிரேமலதா தீர்த்து வைப்பார்.’ என்று சமாதானம் சொல்லினர் தே.மு.தி.க. நிர்வாகிகள். பிரசாரத்துக்கு வந்த பிரேமலதா ”புல்வாமா தாக்குதலை நடத்தியது மோடி, நம்ம அமைச்சர் விஜயபாஸ்கரை ‘குட்கா புகழ் அமைச்சர்’ன்னு விமர்சிக்கிறாங்க.” என்றெல்லாம் உளறிக் கொட்ட, டென்ஷனாகிவிட்டனர் கூட்டணி தலைவர்கள். இந்த பஞ்சாயத்தை சரிகட்ட, வேறு வழியில்லாமல் விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவதாக அறிவித்தார் பிரேமா. கேப்டனுக்கு பல ஐடியாக்கள் கொடுத்து, வீட்டுக்குள்ளேயே ஒத்திகை நடத்தி, நடக்கவும் பேசவும் சொல்லிக் கொடுத்து தயார் செய்தனர். மாலை 4 மணிக்கு கேப்டன் பிரசாரம்! என்று பீற்றினர். ஆனால் வீட்டை விட்டு விஜயகாந்த் வெளியே வந்தபோது இரவு மணி 7. 

இந்த ஓரு நாள் பிரசார கூத்தில் விஜயகாந்தால் சேர்ந்தாற்போல் நாலு வரிகள் கூட பேசமுடியவில்லை. பாவம். ஆனால் அவருக்கு பின்புறம் அமர்ந்து, கேப்டன் பேச வேண்டிய வார்த்தைகளை ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்து பேச வைத்தது ‘சின்னக் குமார்’ எனும் நபர்தான். ஒரு கட்டத்தில் விஜயகாந்தால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் போக, ‘கேப்டன் வெறுமனே கும்பிட மட்டும் செய்யுங்க.’ என்று சைகை காட்டி சமாளிக்க வைத்ததும் இந்த நபர்தான். மொத்தமே மூன்று மணி நேரம் பிரசாரம் (?!) செய்த நிலையில் விஜயகாந்தின் இயலாமை, அமெரிக்க சிகிச்சையிலும் உடல் நலம் தேறாத நிலை, குரல் வள சிக்கல் என எல்லாமே வெளிப்பட்டுவிட்டதாக தே.மு.தி.க. தலைமை நிர்வாகிகளும், கேப்டனின் குடும்பமும் சொல்லி வருந்தியிருக்கின்றனர். வீட்டுக்கு சென்று அமர்ந்ததும், கேப்டன் சைகையாலேயே ‘சின்னக்குமார்தான் என்னை காப்பாத்துனான்’ என்று சொல்லி கண்ணீர்விட்டிருக்கிறார். பிரேமலதா கதறிவிட்டாராம். 

சரி யார் இந்த சின்னக்குமார்?.... ஜெயலலிதாவுக்கு புலவர் சங்கரலிங்கத்தின் மகன் பூங்குன்றன் என்பவர் உதவியாளராக இருந்தார். ஜெ.,வின் உயிர் சசி என்றால் பூங்குன்றன் நிழல். அவரது கண் அசைவுக்கு கூட காரணம் கண்டுபிடித்து அடுத்த மைக்ரோ செகண்டில் அதை நிறைவேற்றும் நபர். அதனால்தான் மகன் போன்ற பூங்குன்றன் இல்லாவிட்டால் ஜெ.வுக்கு கைகால் ஓடாது. 

கருணாநிதிக்கு பல்லாவரம் நித்தியானந்தம். ‘நித்யா’ என்று தி.மு.க.வினரால் விளிக்கப்பட்ட இவர்தான் கருணாநிதியின் எல்லாமுமே. ’எங்க அப்பாவை, அவங்க அம்மா மாதிரி கவனிச்சுக்குற’ என்று செல்வியிடம் பாராட்டையும், ‘தலைவர் கேக்குறார்னு தேவையில்லாத சலுகைகளை பண்ற’ என்று ஸ்டாலினிடம் உரிமையான குட்டுக்களையும் வாங்கிக் கட்டியவர்தான் இந்த நித்யா. 

அப்படித்தான் விஜயகாந்துக்கு இப்போது இந்த சின்னக்குமார் அமைந்திருக்கிறார். அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர்  இவர். கேப்டனுக்கு இப்போது எல்லாமுமே இவர்தானாம். ஒரு தாயாக அவரை பார்த்துக் கொள்கிறாராம். பிரேமலதா விஜயகாந்தை வீட்டில் விட்டுவிட்டு தைரியமாக தமிழகமெங்கும் பிரசாரத்தில் வலம் வர காரணம் இந்த சின்னக்குமார் இருக்கும் நம்பிக்கையில்தான். அதனால்தான் ‘எங்களின் மூத்த மகன்’ என்று கட்சிக்காரர்களிடம் சின்னக்குமாரை பெருமையாக அடையாளப்படுத்துகிறார் பிரேமா. 

விஜயகாந்த் மற்றும் பிரேமலதா இருவரும் அமெரிக்காவில் இருந்தபோது, அவர்களின் மகன் விஜய் பிரபாகரன் தே.மு.தி.க. கூட்டங்களில் தத்துப் பித்தென்றும், தாறுமாறாகவும் பேசியபோது அவரது இடது புறம் நெருக்கமாக நின்று வார்த்தைக்கு வார்த்தை கைகளை சப்பு சப்புவென தட்டி ஓவராய் உணர்ச்சி வசப்பட்டாரே ஒரு கேரக்டர்...அவர்தான் இந்த சின்னக்குமார். கேப்டன் குடும்பத்தின் மீது வெறித்தனமான அன்பாம் இவருக்கு. ஆக சின்னக்குமார்தான் கேப்டன் குடும்பத்தின் பெரிய நம்பிக்கைன்னு சொல்லுங்க!