ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டால் ஏமாந்துபோவீர்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பேசினார்.
உடல்நலம் குன்றி வீட்டில் ஓய்வு எடுத்துவந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், எப்போது பிரசாரம் செய்வார் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர் பிரசாரத்துக்கு வராமல் இருந்தது அக்கட்சி தொண்டர்களையும் வேட்பாளர்களையும் சோர்வடைய செய்திருந்தது. மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு சென்னையில் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று மாலை சென்னையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.


வில்லிவாக்கத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜயகாந்துக்கு கட்சி தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். பொதுமக்களும் விஜயகாந்தைக் காண திரண்டிருந்தனர். பேசுவதற்கு சிரமப்பட்டலும் தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் ஈடுபட்டார். 
வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு ஆதரவாக பெரவள்ளூரில் விஜயகாந்த் பேசும்போது, “திமுக தலைவர் ஸ்டாலினை நம்பி யாரும் தேர்தலில் வாக்களிக்காதீங்க. அவரை நம்பி வாக்களிச்சா ஏமாந்துடுவீங்க. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்ல உள்ளம் படைத்தவர். அதேபோல நல்ல உள்ளம் படைத்த வடசென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜூக்கு முரசு சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள்” என்றார்.


சென்னையில் செல்லும் வழியெல்லாம் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த கட்சியினரையும் பொதுமக்களையும் பார்த்து விஜயகாந்த் கையசைத்தபடி சென்றார். நீண்ட நாட்கள் கழித்து விஜயகாந்தை தேர்தல் களத்தில் பார்த்த அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.