அதிமுக கூட்டணியில் எத்தனை சதவீத இடங்களைப் பெற்று உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து தேமுதிக சார்பில் ஆலோசனை நடத்துகிறது. 
 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பிடித்தது. பாமகவுக்கு 7 தொகுதிகள் கொடுத்ததுபோல தங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று தேமுதிக முறுக்கியது. பின்னர் ஒருவழியாக 4 இடங்களைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. என்றாலும் அதிமுக கூட்டணியில் தொடரும் தேமுதிக, அதிமுகவுடன் சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க ஆர்வமாக உள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க விஜயகாந்த் வந்தது அதிமுகவினருக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
தேர்தல் முடிவு வந்த பிறகு விஜயகாந்துக்கு போன் செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்பெஷல் நன்றி தெரிவித்ததால், தேமுதிக தலைமையில் உச்சி  குளிர்ந்துபோனது. இந்நிலையில் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று ஆளுங்கட்சி கூறிவருகிறது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியினருடன் ஆலோசனை நடத்த தேமுதிகவும் தயாராகிவருகிறது. 
இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் வருகிற 7ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
அதிமுகவிடம் 2 மேயர் சீட்டுகள் உள்பட 20 சதவீதம் இடங்களைக் கேட்பது என்று தேமுதிக தரப்பில் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதேபோல வட மாவட்டங்களில் நகராட்சி தலைவர் பதவிகளைக் கூடுதலாகப் பெறுவது, வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்டுப் பெறவும் அக்கட்சி ஆலோசிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.