ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிக் கணக்கைத் தொடங்கியுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் அனைத்துக் கட்சிகளும் கொள்கை , கோட்பாடு என அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு லாபக்கணக்கை மட்டுமே முன்னிறுத்தி கூட்டணி பேசி வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக- காங்கிரஸ் கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்டது. அந்த கூட்டணியில் மதிமுக. இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்றவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் பாமக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவது குறித்து தேமுதிக பேசி வருவதாக சுதீஷ் தெரிவித்திருந்தார். ஆனால் பாமக இடம் பெறும் கூட்டணியில் அங்கம் வகிப்பதை தேமுதிக விரும்பவில்லை என கூறப்படுகிறது.  

கடந்த 2014 நாடாளுமன்றத்  தேர்தலில் சேலத்தில் போட்டியிட்ட தேமுதிக  இளைஞரணி செயலர் சுதீஷ்  தோல்வி அடைவதற்கு பாமகவின் உள்ளடி வேலையே காரணம் என தேமுதிகவினர்  கருதுகின்றனர். எனவே அதிமுக  கூட்டணியில் பாமக  இடம் பெற்றால் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என வடமாவட்டங்களை சேர்ந்த தேமுதிக  நிர்வாகிகள் பலர் சுதீஷிடம் வலியுறுத்தியுள்ளனர்

இதையடுத்து திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மூன்று தொகுதிகள் தருவதாக சில நிபந்தனைகளுடன் கனிமொழி தரப்பில் பேசப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் கனிமொழி தரப்பினரும் சுதீஷ் தரப்பினரும் சென்னையில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக்க  உறுதுணையாக இருப்போம் என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அறிவிக்க வேண்டும்' என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வட மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி ஆரணி போன்ற தொகுதிகளை கேட்கக் கூடாது. சுதீஷ் போட்டியிடுவதற்கு சேலம் தரப்படும்.அத்துடன் தென் மாவட்டங்களில் ஒன்று கொங்கு மண்டலத்தில் ஒன்று என மொத்தம் மூன்று தொகுதிகள் மட்டுமே தரப்படும்' என கனிமொழி தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

அதற்கு 'அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் சென்னை திரும்பியதும் அவரிடமும் பிரேமலதாவிடமும் ஆலோசனை நடத்திய பின் முடிவை தெரிவிக்கிறோம்' என சுதீஷ் கூறியதாக தெரிய வந்துள்ளது.