தி.மு.க – தே.மு.தி.க பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் இருந்து கனிமொழி விலகிக் கொண்டுள்ளார்.

தேமுதிகவை எப்படியாவது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று சபரீசன் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தேமுதிகவோ தங்கள் நிலைப்பாட்டில் இருந்த ஒரு விழுக்காடு கூட இறங்கி வராமல் தொடர்ந்து கெத்து காட்டி வருகிறது. அதுவும் ஸ்டாலின் வீட்டுக்கு வந்து சென்ற பிறகு பிரேமலதாவின் டிமாண்ட் அதிகமாகியுள்ளது. முதலில் மூன்று பிளஸ் ஒன்று என்று பேச வருமாறு கூறியதை தொடர்ந்தே ஸ்டாலின் கேப்டன் வீட்டுக்கு செல்ல ஏற்பாடுகளை செய்தார் சபரீசன். 

ஆனால் ஸ்டாலின் வந்து சென்ற பிறகு நான்கு பிளஸ் ஒன் அல்லது மூன்று பிளஸ் ஒன் மற்றும் இடைத்தேர்தலில் எட்டு தொகுதிகள் என்று டிமாண்டை உயர்த்தியுள்ளார் பிரேமலதா. இது தான் தற்போது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் இழுத்தடிக்க காரணமாகியுள்ளது. இடைத்தேர்தல் தொகுதிகளை கொடுக்க கூடாது என்று ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இதனால் காங்கிரசிடம் இருந்து ஒரு தொகுதியை பெற்றத் தருமாறு கனிமொழியை ஸ்டாலின் கேட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து டெல்லி சென்ற கனிமொழி முகுல் வாஸ்னிக்கை சந்தித்து பேசினார். அப்போது ஒரு தொகுதியை விட்டுத் தருவது குறித்து பரிசீலிப்பதாக முகுல் வாஸ்னிக் கூறினார். இதனால் நம்பிக்கையுடன் கனிமொழி சென்னை திரும்பினார். ஆனால் இந்த தகவலை அறிந்த தமிழக காங்., கமிட்டி நிர்வாகிகள் கொந்தளித்து போயுள்ளனர். தேமுதிகவுக்காக ஒரு தொகுதிய விட்டுக் கொடுப்பதால் நமக்கு எந்த நன்மையும் இல்லை என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். 

இதனால் ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்கும் முடிவில் காங்கிரஸ் பின்வாங்கியது. இதனால் அப்செட்டான கனிமொழி விவரத்தை ஸ்டாலினிடம் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இதனிடையே கேப்டன் வீட்டுக்கு சென்று பிரேமலதாவை சந்திக்கும் திட்டத்தையும் கனிமொழி கைவிட்டுவிட்டார். இந்த நிலையில் தான் திமுக கூட்டணி பேச்சில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் தேமுதிக அதிமுக கூட்டணிக்கு செல்வதாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அதாவது மூன்று பிளஸ் ஒன்று மற்றும் 150 கோடி ரூபாய்க்கு தேமுதிக விலை போய்விட்டதாக அந்த தகவல் றெக்கை கட்டி பறக்கிறது. 

ஆனால் இது குறித்து தேமுதிக தரப்பில் விசாரித்த போது கேட்ட தொகுதியை தர விரும்பாத திமுக இப்படி தனது ஐடி விங்கை வைத்து தேமுதிகவுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி வருகிறது. இதனை நாங்களும் கவனித்து தான் வருகிறோம்.  இப்படி எல்லாம் செய்தால் நாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வோம் என்று திமுக நினைக்கிறது., அதற்கு வாய்ப்பு இல்லை. கடந்த தேர்தலில் 11 தொகுதிகள் வழங்க கலைஞர் முன்வந்தார். ஆனால் நாங்கள் வரவில்லை. தற்போது அதில் பாதியை தான் கேட்கிறோம் என்று தங்கள் தரப்பு விளக்கத்தை தேமுதிக கொடுக்கிறது.