விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உடன் பல ஆண்டுகால பகை நீடிப்பதால் அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் சுதீஷ் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் இல்லையே கேப்டனுடன் மிகவும் நெருக்கமானவர் எல்.வெங்கடேசன். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்ட தேமுதிகவையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் நீண்ட நாட்களாக வைத்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் வடக்கு தெற்கு என பிரிக்கப்பட்டிருந்தாலும் இரண்டுக்குமே மாவட்ட செயலாளர் பல ஆண்டுகளாக வெங்கடேசன் தான். இதற்கு காரணம் கேப்டன் உடனான அவரது நெருக்கம் தான். 

மாவட்டச் செயலாளர்களில் யாரும் கேப்டனுடன் ஒன்றாக காரில் பயணிப்பது கிடையாது. இதேபோல் தேர்தல் பிரச்சார சமயத்தில் மட்டுமே மாவட்ட செயலாளர்கள் வேட்பாளர்களாக இருக்கும் பட்சத்தில் கேப்டனுடைய பிரச்சார வாகனத்தில் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் எல்.வெங்கடேசனை கேப்டன் எப்போதுமே தன் அருகிலேயே வைத்திருப்பார். அதனால்தான் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ரிஷிவந்தியம் உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் கேப்டன் கடந்த இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டார். 

கேப்டனுடன் இந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தாலும் எல்.வெங்கடேசனுக்கும் சதீசுக்கும் அந்த அளவிற்கு நெருக்கம் கிடையாது. சொல்லப்போனால் எல். வெங்கடேசன் சுதீஷ் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் உண்டு. கேப்டனுடன் எல். வெங்கடேசன் நெருக்கமாக இருப்பதால் தங்களை மதிப்பதில்லை என்ற ஒரு மனக்குமுறல் தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவருக்குமே உண்டு. அந்த வகையில் சுதீசும் கூட எல் வெங்கடேசனை சற்று தள்ளியே வைத்திருப்பார். கேப்டன் தொலைக்காட்சியில் எல் வெங்கடேசன் தொடர்புடைய செய்திகள் எதுவும் வராமல் பார்த்துக்கொள்வது சுதீஷின் வேலை என்று கூட பேச்சு அடிபடுவது உண்டு. 

வெங்கடேசனும் கூட கேப்டனுடைய மைத்துனர் என்பதற்காக சுதீஷ் உடன் பணிந்து செல்வதெல்லாம் கிடையாது. கேப்டன் எனக்கு கொடுக்கும் வேலையை நாம் சரியாக பார்க்கிறேன் கேப்டன் எனக்கு கொடுக்கும் வேலையை நாம் சரியாக பார்க்கிறேன் என்பதுதான் அவரது நிலைப்பாடு. இந்த நிலையில்தான் அதிமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எல்.கே.சுதிஷ். இந்த கள்ளக்குறிச்சி தொகுதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்டது. அந்த வகையில் சுதீஷின் வெற்றி தற்போது எல் வெங்கடேசன் கையில் என்று கூட சொல்லலாம். பழைய பகையை மனதில் வைத்துக்கொள்ளாமல் எல் வெங்கடேசன் தேர்தல் பணியாற்றி கேப்டன் மச்சானை நிறைவேற்றுவாரா அல்லது உள்ளடி வேலைகள் பார்த்து வருவாரா என்பது தேர்தல் முடிவு வெளியான பிறகுதான் தெரியும்.