திமுக, அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே 40 தொகுதிகளிலும் விருப்ப மனுவை பெற்றுக்கொண்டிருக்கும் தேமுதிகவில் மனு வினியோகம் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிக எந்தக் கூட்டணியில் சேரும் என பட்டிமன்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அந்தக் கட்சி 40 தொகுதிகளிலும் விருப்ப மனுவை பெற்றுவருகிறது. போட்டியிட விரும்புவோருக்கு கடந்த 24-ஆம் தேதி முதல் விருப்ப மனு பெற்றுவருகிறார்கள். பொது தொகுதி விண்ணப்பம் ரூ. 20 ஆயிரத்துக்கும், தனித் தொகுதி விண்ணப்பம் ரூ. 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் 6-ஆம் தேதிக்குள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என தேமுதிக தலைமை அறிவுறுத்திஉள்ளது. 

கடந்த 24-ஆம் தேதி அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருப்ப மனு பெறும் நிகழ்வை தொடங்கி வைத்தார். அன்றைய தினம் 300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களைப் பெற்று சென்றார்கள். ஆனால், அதன்பின்னர் விருப்ப மனுக்களை கட்சி நிர்வாகிகள் பெற்று செல்வது குறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகக் குறைவாக ஒற்றை இலக்கத்தில் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகின்றன.  எதிர்பார்த்த அளவு விருப்ப மனு வினியோகம் ஆகாததால், கட்சி தலைமை அதிர்ச்சியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 

ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடையாததாலும், எத்தனை தொகுதிகள் தேமுதிகவுக்குக் கிடைக்கும் என்பது தெரியததாலும் விருப்ப மனுக்க்கள் விற்பனை டல் அடிப்பதாக அக்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. கூட்டணி உறுதியானால் விருப்ப மனுக்கள் விற்பனை சூடுபிடிக்கும் எனவும் அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.