தேமுதிக அலுவலகத்தில் நேற்று தொடங்கிய நேர்காணல் வெளிப்படையாக நடைபெற்ற சீட்டிங் என்று அந்த கட்சியினரே விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஒரு மாத கால இழுபறிக்கு பிறகு அதிமுக கொடுப்பதை வாங்கிக் கொண்டு கூட்டணிக்கு ஓ.கே சொன்னார் பிரேமலதா. அதற்கு முன்னதாகவே தேமுதிக போட்டியிடும் நான்கு தொகுதிகள் என்னென்ன என்பதையும் அதிமுகவுடன் பேசி பிரேமலதா முடிவெடுத்துவிட்டார். அதன் பிறகே ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த வகையில் தேமுதிக போட்டியிடப்போகும் தொகுதிகள் எவை எவை என்பது பிரேமலதாவுக்கு நன்றாக தெரியும். 

அப்படி இருந்தும் நேற்று 40 தொகுதிகளுக்கான நேர்காணலை தேமுதிக தொடங்கியது. இதில் கொடுமை என்ன என்றால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தலைமை ஏற்று நான்கு தொகுதிகளை கிட்டத்தட்ட இறுதி செய்த சுதீஷ் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது தான். போட்டியிடப்போகும் 4 தொகுதிகள் என்ன என்ன என்று தெரிந்தும் எதற்காக 40 தொகுதி வேட்பாளர்களையும் அழைத்து நேர்காணல் செய்ய வேண்டும், இது சீட்டிங் இல்லையா என்று அக்கட்சியினர் முனுமுனுக்கிறார்கள்.

இது தெரிந்து விருப்ப மனு தாக்கல் செய்த பலரும் தலைமை கழகம் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை. இது ஒரு புறம் இருக்கும் நேர்காணல் என்பது வெறும் கண்துடைப்பாக மட்டுமே நடைபெற்றதாக கூறுகிறார்கள். அதிமுக தர முன்வந்துள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் தான் முறையாக நடைபெற்றுள்ளது. அந்த தொகுதியில் இருந்து வந்தவர்களை தான் அமர வைத்து பேசியுள்ளனர்.

 

மற்றவர்களை எல்லாம் வந்த வேகத்தில் ஓகே ஓகே என்று திருப்பதியில் கூறி அனுப்புவது போல் அனுப்பியுள்ளனர். நான்கு தொகுதிகளை வாங்கிக் கொண்ட பிறகு ஏன் வீராப்பாக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர் காணல் நடத்த வேண்டும் என்று பிற கட்சியினரும் கூட தேமுதிகவினரை இலக்காரமாக பார்க்க தொடங்கியுள்ளனர். 7 தொகுதிகளை பெற்றுள்ள பாமகவே அமைதியாக இருக்கிறதே என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.