தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மைத்துனரும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான எல்.கே. சுதிஷ் கோயில் கோயிலாகச் சென்றுகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் இடம்பிடித்த தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டது. கள்ளக்குறிச்சி வேட்பாளராக சுதிஷ் களமிறங்கினார். இந்தத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி களமிறங்கியுள்ளார். ஏற்கனவே சுதிஷ், 2009-ல் கள்ளக்குறிச்சி தொகுதியிலும் 2014-ல் சேலம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 
இந்த முறை அதிமுக, பாமக என வலுவான கூட்டணியில் களமிறங்கியுள்ளதால், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார் சுதிஷ். அதற்கேற்ப தேர்தலில் திமுக வேட்பாளர் கெளதம சிகாமணிக்கு ஈடாக கடும் போட்டியைக் கொடுத்திருக்கிறார் சுதிஷ். தேர்தல் செலவிலும் சுதிஷ்  தாராளம் காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், தேர்தல் முடிவு எப்படி வருமோ என்ற பதற்றத்தில் சுதிஷ் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த காலத் தேர்தல்களைப் போல அல்லாமல் இந்த முறை வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக கோயில் கோயிலாக சுதிஷ் சுற்றிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு தமிழ் நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கும் சென்று தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 25-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சுதிஷ் சென்று வந்துவிட்டதாகவும் தேமுதிகவினர் சொல்கிறார்கள்.