Asianet News TamilAsianet News Tamil

இவங்க எங்க கேப்டனோட கால் தூசி கூட இல்ல... அசிங்க அசிங்கமாக திட்டும் தேமுதிக தொண்டர்கள்!!

’தேவைப்பட்டால் தேர்தலில் நிற்பேன்’ விஜயகாந்தின் மகன் பிரபாகரன் உதிர்த்திருக்கும் வேத வாக்குகள் இவை. தமிழக அரசியல் தலையெழுத்தின்படி தலைவரின்  வாரிசு சொன்ன இந்த வார்த்தைக்காக அவரைக் கொண்டாடத்தானே வேண்டும்! ஆனால், கடுப்பாகியிருக்கின்றனர் தே.மு.தி.க. நிர்வாகிகள். 

dmdk cadres said Never to beat vijayakanth
Author
Chennai, First Published Dec 26, 2018, 7:36 PM IST

ஏன்? என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டால்...”தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்ல எல்லாம் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்குது, ஜனரஞ்சக அந்தஸ்து இருக்குது, அவங்களோட முகத்துக்காகவும் வாக்குகள் குவியும். 
ஆனால், எங்க கட்சியில கேப்டனை தவிர ஒரு முகம், அட ஒரேயொரு முகம் மக்களோட மனசை வென்ற முகமாக இருக்குதா சொல்லுங்க! கிடையாது.

கட்சி துவங்குனதுல இருந்து, சமீப காலம் வரைக்கு கருணாநிதியை திட்டிய விஜயகாந்த், வாரிசு அரசியலுக்காக ஸ்டாலினையும் திட்டினார். ஆனால் மனசாட்சியின் படி பேசுவதா இருந்தால், ஸ்டாலின் அடிபட்டு மிதிபட்டு அரசியலில் வளர்ந்தவர். அவரை ‘வாரிசு அரசியல்’ வட்டத்தில் சிக்க வைப்பது தரமப்படி நியாயமில்லை. இது கேப்டனுக்கும் தெரிந்தாலும் வேறு வழியில்லாமல் அரசியல் செய்தார் அப்படி பேசி. 
ஆனால் இன்னைக்கு கேப்டன் குடும்பமும் வாரிசு அரசியலைத்தானே பண்ணுது. தலைவரால் நடக்க கூட முடியாத, தெளிவாகப் பேசக்கூட முடியாத நிலையில கட்சியோட பொருளாளர் பதவியை பிரேமலதா கையிலெடுத்து கட்சியை நடத்த துவக்கினார்.

dmdk cadres said Never to beat vijayakanth

கேப்டன் மனைவிங்கிறதுதான் பிரதான முன்னுரிமை இதற்கு!  பிரேமலதா கடந்த சில காலங்களாகவே கட்சிப் பணியில் இருக்கார், கடந்த 2011 தேர்தல்ல ஜெயலலிதா கூட கூட்டணியை பேசி முடிச்சதே அவர் தான். எங்க கட்சியின் பிரச்சார பீரங்கிதான் அவர். பிரேமலதா அந்த பொசிஸனுக்கு வர்றதை கூட ஏத்துக்குறோம். 

ஆனால் திடீரென கேப்டனின் மகன் முளைச்சிருக்கார். நிறுத்தி நிதானமா அரசியல் பேச துவங்கியிருக்கார்! சந்தோஷம். ஆனால் ‘தேவைப்பட்டா தேர்தலில் நிற்பேன்’ அப்படின்னு சொல்லி சீட்டுக்கு துண்டு போட்டிருக்கிறது என்ன ஜனநாயகம்? இந்த  கட்சி துவங்கிய நாளில் இருந்து கேப்டனின் நிழலாகவே இருக்கும் சுதிஷுக்கே கட்சியில் செல்வாக்கு கிடையாது. அவருக்காக கட்சிக்குள் ஆயிரம் ஓட்டுக்கள் விழுந்தால் கூட அதிசயம். 

நிலைமை இப்படியிருக்கையில், புதுசா கேப்டனின் வாரிசுகள் தேர்தல் அரசியலுக்கு எடுத்த எடுப்பிலேயே வருவது நல்லதில்லைங்க. ஊருக்கு ஒரு நியாயம், தனக்கொரு நியாயமுன்னு கேப்டன் வெச்சுக்க கூடாது. கேப்டனால் தீவிர அரசியலில் செயல்படாத நிலையிலும், தொடர் தோல்விகளாலும் கட்சி நசுங்கி நைந்து போய் கிடக்குது. மாவட்ட செயலாளர் பதவியை ஏத்துக்க கூட பல மாவட்டங்களில் யாரும் தயாரில்லை. ஆக அமைப்பு ரீதியா கட்சியை முதலில் வலுப்படுத்த வேண்டியதுதான் இப்போதைய தேவையே தவிர, தேர்தலுக்காக கேப்டனின் மனைவி, மகன்கள்ன்னு வாரிசுகள் வந்து குதிக்கிறது அர்த்தமற்றது மட்டுமில்லைங்க முட்டாள்தனமானதும். 

dmdk cadres said Never to beat vijayakanth

தே.மு.தி.க.ன்னா அது கேப்டன் தான். அவரைத்தவிர வேற யாரையும் ஏத்துக்க தொண்டர்களும் தயாரில்லை, மக்களும் கண்டுக்க மாட்டாங்க. முதலில் கேப்டனின் செல்வாக்கில் பத்து சதவீதத்தையாவது பெற்ற பிறகு இந்த வாரிசுகள் தேர்தல் பற்றி யோசிக்கலாம்.
அதுவரைக்கும் சின்ன கேப்டன், லேடி கேப்டன்னு அடைமொழி வெச்சு சந்தோஷப்பட்டுக்கிறது அற்ப செயல். அதையும் மீறி இந்த வாரிசு ஆட்டபாட்டங்கள் தொடர்ந்தால் பல மாவட்டங்களில் கட்சி கலைஞ்சு காணாமல் போயிடும்.” என்று போட்டுப் பொளந்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios