தமிழகத்தில்  மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது.. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பிரேமலதா விதித்த நிபந்தனையால் கூட்டணி ஏற்படவில்லை. 

அதன்பிறகு பல்வேறு இழுபறிக்கு பிறகு அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி ஏற்பட்டது. அப்போது, பேட்டி அளித்த பிரேமலதா பத்திரிகையாளர்களை மரியாதை இல்லாமல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 இடங்கள் வழங்கப்பட்டது. 

இந்த 4 இடங்களிலும் தற்போது தேமுதிக படுதோல்வி அடைந்துள்ளது. பிரேமலதா தம்பி சுதீஷ் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சுதீஷ் மட்டும் விஜயகாந்த் கட்சி தொடங்கியதில் இருந்து 5 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் தேமுதிக 2.19 சதவீதம் வாக்குகளே வாங்கியுள்ளது. 

ஒரு மாநில கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், மாநிலத்தில் பதிவாகும் மொத்த வாக்கில் 8 சதவீதம் பெற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. தற்போது தேமுதிக கட்சி கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே வாங்கியுள்ளது. இதையடுத்து தேமுதிக மாநில அந்தஸ்தை இழந்துள்ளது. 

இதே போல் பாமக  மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக 7 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் அன்புமணி உள்ளிட்ட 7 பேரும் தோல்வி அடைந்தனர். ஏற்கனவே மாநில அங்கீகாரத்தை இழந்த பாமக, இந்த தேர்தலில் வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுவிடலாம் என நினைத்தனர். இதற்காகவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால், 5.42 சதவீத அளவே வாக்கு வாங்கியதால் பாமகவும் மீண்டும் அங்கீகாரம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.