தனித்து போட்டியிட போவதாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்த நிலையில், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமமுக கொள்கைப் பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

தனித்து போட்டியிட போவதாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்த நிலையில், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமமுக கொள்கைப் பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் ஜெயலலிதாவை அவமதித்த எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும் தினகரன் அறிவித்துவிட்டார். இந்நிலையில் அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக பேசிவருவதாக அறிவித்திருக்கிறார். 

இதுதொடர்பாக அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேமுதிக உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். நாங்கள் 3வது அணியல்ல; முதல் அணியே நாங்கள் தான். அதிமுகவில் உள்ள 90 சதவீத தொண்டர்கள் எங்களோடுதான் இருக்கிறார்கள். தமிழக அரசின் கவர்ச்சித் திட்டங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. 

நேற்றுவரை அதிமுகவை ஊழல் கட்சி எனக்கூறிவந்த பாமக, இப்போது அதனோடு கூட்டணி வைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அரசியல் மாற்றம் நிகழும்” என்று தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் 38 தொகுதிகளில் அமமுக தனித்து போட்டி என்று தினகரன் அறிவித்திருந்தார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போதுகூட, “தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் திமுக - அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டன. எனவே, இந்தக் கூட்டணியில் ஒன்றில்தான் இணைவோம்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தங்க தமிழ்செல்வனின் பேட்டி குழப்பத்தை அதிகரித்திருக்கிறது.